புதுச்சேரி: புதுச்சேரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்கு வாழ்நாள் முழுவதும் சாதி சான்று வழங்கப்படும். 10, 11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அந்தந்த பள்ளிகளிலேயே சான்று வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் மக்கள் மீண்டும் மீண்டும் அரசு அலுவலகங்களுக்கு வருவது தவிர்க்கப்படும். இது குறித்து விரைவில் அரசாணை வெளியிடப்படும்  என சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

Continues below advertisement


புதுச்சேரி பட்ஜெட் 


புதுச்சேரி சட்டப்பேரவையில் 2025 -2026ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை, நிதித்துறை பொறுப்பு வைக்கும் முதலமைச்சர் ரங்கசாமி ரூ.13,600 கோடிக்கு நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.


மாநில சொந்த வருவாய் - ரூ.7,441.40 கோடியும், இதில் ரூ.11,624.72 கோடி வருவாய் செலவினத்திற்காகவும், ரூ.1975.28 கோடி மூலதின செலவினங்களுக்காவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 


இதில் பேரிடர் மேலாண்மை நிதி மற்றும் மத்திய அரசின் நிதி ரூ.3,432.18 கோடியும், மத்திய அரசின் சாலை நிதி ரூ.25 கோடி, மத்திய அரசின் திட்டங்களின் கீழ் ரூ.400 கோடி, ரூ.2101.42 கோடி கடன் பெற மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.


அரசு மற்றும் அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு மாலை சிற்றுண்டி வழங்கப்படும்.


வாரந்தோறும் 3 நாள் முட்டை இனி வழங்கப்படும். 6 முதல் 12 வரை அரசு பள்ளியில் பயின்று உயர்கல்வி (இளநிலை கல்வி) படிக்கும் மாணவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு மாதத்தோறும் ரூ.1000 ஊக்கத் தொகை வழங்கப்படும் என பட்ஜெட்டில் முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.


இந்த நிலையில் இன்று நடைபெற்று வரும் பட்ஜெட் மீதான விவாதத்தில், புதுச்சேரியில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உயர் கல்வி சேர்க்கைக்கான விண்ணப்ப கட்டணம் ரத்து செய்யப்படுகிறது என சட்டப்பேரவையில் கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்தார்.