புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்புக்கு இடையே வழக்கம் போல் டென்னிஸ் ஆடிய முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்புக்கு இடையே முதல்வர் ரங்கசாமி வழக்கம் போல் டென்னிஸ் விளையாடினார்.

புதுச்சேரி: கவர்னருடனான மோதலை தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி ராஜினாமா அறிவித்த நிலையில் புதுச்சேரி அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் பரபரப்புக்கு இடையே முதல்வர் ரங்கசாமி வழக்கம் போல் டென்னிஸ் விளையாடினார்.
புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் – பாஜக கட்சிகள் இணைந்து ஆட்சி நடத்தி வருகின்றன. இதன்படி தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி செயல்படுகிறார். துணை நிலை ஆளுநராக கைலாஷ்நாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சுகாதாரத்துறை இயக்குநர் நியமனத்தால் அதிருப்தி அடைந்த முதலமைச்சர் ரங்கசாமி, பதவியை ராஜினாமா செய்யப்போவதாக கூறியதால், புதுச்சேரி அரசியலில் பரபரப்பு நிலவி வருகிறது.
புதுச்சேரியில் ஆளுனர் கைலாஷ்நாதன் முதலமைச்சர் ரங்கசாமி இடையே நிர்வாக ரீதியாக கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வந்தது. இந்நிலையில் காலியாக உள்ள சுகாதாரத் துறை இயக்குநர் பதவிக்கு துணை இயக்குநர் அனந்த லட்சுமி பெயரை முதல்வர் ரங்கசாமி பரிந்துரை செய்துள்ளார். நேற்று முன்தினம் மதியம், இயக்குநர் பதவிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் செவ்வேள் பெயர் வெளியானது. அதனால் அதிருப்தி அடைந்த ரங்கசாமி, சட்டசபையில் இருந்த சபாநாயகர் செல்வத்தை அழைத்து பேசினார்.
எதற்கு இந்த முதல்வர் பதவி!
'நான் அனுப்பிய பட்டியலை புறக்கணித்து ஆளுநர் தன்னிச்சையாக நியமனம் செய்வதற்கு நான் எதற்கு, ஒரு இயக்குநர் பதவி கூட போட முடியாததற்கு எதற்கு இந்த முதல்வர் பதவி. உடனடியாக என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப் போகிறேன். இனி நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள்' என கடும் கோபமாக கூறினார். தொடர்ந்து, மாலையில் நடைபெற்ற ஆளுநர் விழாவை புறக்கணித்து விட்டு, ஆவேசத்துடன் தனது அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு, வீட்டிற்கு சென்றார்.
முதலமைச்சரை சமாதானப்படுத்த பாஜக - அதிமுக., என்.ஆர்., காங்., முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி முதல்வருக்கு நெருக்கமானவர்கள் உள்பட சட்டசபை துவங்கி முதல்வர் வீடு வரை சென்று முதல்வரை சந்தித்து பேசிவிட்டு சென்றனர். இதனால் புதுச்சேரியில் துவங்கி டெல்லி பா.ஜக தலைமை வரை அரசியல் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
டென்னிஸ் விளையாடிய முதல்வர் ரங்கசாமி
இந்நிலையில், எவ்வித டென்ஷனும் இல்லாமல் முதல்வர் ரங்கசாமி நேற்று மாலை 6 மணியளவில் துவங்கி வழக்கம் போல் தனது வீட்டில் உள்ள கிரவுண்டில் 45 நிமிடம் டென்னிஸ் விளையாடினார். 7 மணியளவில் அங்கு வந்த டெல்லி மேலிடப் பிரதிநிதி மல்லாடி கிருஷ்ணராவ் சந்தித்து பேசினார். அவரைத் தொடர்ந்து அமைச்சர் திருமுருகன் மாங்கனி திருவிழாவில் முதல்வர் பங்கேற்க வருமாறு அழைப்பு விடுத்து சென்றார். முன்னதாக அ.தி.மு.க., மாநில செயலாளர் அன்பழகனும், முதல்வரை சந்தித்து 2 மணி நேரத்திற்கு மேலாக ஆலோசனை நடத்தினார். அதனையடுத்து திருமணம் உள்ளிட்ட வரவேற்பு நிகழ்ச்சிகளுக்கு முதல்வர் புறப்பட்டு சென்றார்.
முதல்வர் ரங்கசாமி வீட்டில் வழக்கமாக போலீஸ் கெடுபிடி இருக்காது. ஆனால், நேற்று முதல்வரை சமாதானப்படுத்த பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் அடுத்தடுத்து அவரது வீட்டிற்கு வருகை தந்தனர். இதனால், ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், முக்கியஸ்தர்கள் மட்டும் முதல்வரை சந்திக்கும் வகையில், வீட்டு மாடிப்படிக்கட்டில் ஐ.ஆர்.பி.என் போலீசார் பாதுகாப்பு பணியில் நிறுத்தப்பட்டிருந்தனர்.




















