தொடர் விடுமுறை- பொதுமக்களுக்கு சூப்பர் அறிவிப்பு
விடுமுறை எப்போது வரும், வெளியூர்களுக்கோ, உறவினர்கள் வீட்டிற்கோ செல்லலாம் என மக்கள் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். அந்த வகையில் கொளுத்தும் வெயில் காலத்தில் குளுமையான இடங்களுக்கு செல்லும் வகையில் தொடர் விடுமுறையானது கிடைக்கவுள்ளது. இதன் படி தமிழ் புத்தாண்டையொட்டி தொடர் விடுமுறை வரவுள்ளதால் பொதுமக்களின் வசதிக்காக சூப்பரான அறிவிப்பை போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை) ஏப்ரல் 11 (சனிக்கிழமை). மற்றும் ஏப்ரல் 12 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் ஏப்ரல் 14 (செவ்வாய்கிழமை) தமிழ் வருட பிறப்பு ஆகிய நாட்களில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை. நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 10/04/2026 அன்று 100 பேருந்துகளும், மற்றும் 11/04/2026 அன்று 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி. கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 10/04/2026 வெள்ளிக்கிழமை அன்று 575 பேருந்துகளும், 11/04/2026 சனிக் கிழமை 395 பேருந்துகளும் இயக்கப்படவுள்ளது.
மாதாவரத்திலிருந்து 10/04/2026 மற்றும் 11/04/2026 ஆகிய நாட்களுக்கு 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர். திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது மட்டுமில்லாமல் ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் 12/04/2028 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14/04/2026 (செவ்வாய்கிழமை) ஆகிய நாட்களில் 735 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்பதிவு செய்து பயணியுங்கள்
எனவே சிறப்பு பேருந்தில் பயணிக்கும் வகையில், இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,104 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,231 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 6,562 பயணிகளும் மற்றும் 14/04/2026 அன்று 5,285 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
