செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய மற்றும் உரிமையாளர்களால் கைவிடப்பட்ட நிலையில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் 9ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல் துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Continues below advertisement

85 வாகனங்கள் ஏலம்

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த பல்வேறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், குற்ற வழக்குகளில் தொடர்புடைய 85 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதேபோல் திருக்கழுகுன்றம் நீதிமன்ற வளாகத்தில் 22 வாகனங்களும், மதுராந்தகம் நீதிமன்ற வளாகத்தில் பல வாகனங்களும் நிறுத்தப்பட்டு மொத்தம் ஏராளமான வாகனங்கள் ஏலத்திற்கு தயாராக உள்ளன.

ஏலம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்

இந்த பொது ஏலமானது வரும் 9ஆம் தேதியன்று, செங்கல்பட்டு மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. ஏலத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் அன்றைய தினம் மாலை 4:00 மணிக்குள் தங்களது வருகையை உறுதி செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Continues below advertisement

முன்பணம் மற்றும் விதிமுறைகள்

ஏலத்தில் பங்கேற்க விரும்பும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள், ஏலம் எடுப்பதற்கு முன்பாக முன்பணத்தை செலுத்த வேண்டும். இருசக்கர வாகனங்களுக்கு ₹2,000 முன்பணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹5,000 முன்பணமாக செலுத்த வேண்டும்.

ஏலம் எடுக்க வருபவர்கள் தங்களுடைய ஆதார் அட்டை நகலை சமர்ப்பித்து, தங்களது விபரங்களை முறையாகப் பதிவு செய்ய வேண்டும். ஏலம் முடிவடைந்ததும், ஏலம் எடுக்காத நபர்கள் செலுத்திய முன்பணம் அவர்களிடம் உடனடியாகத் திரும்ப ஒப்படைக்கப்படும்.

ஜிஎஸ்டி மற்றும் இதர கட்டணங்கள்

ஏலம் எடுப்பவர்கள், தாங்கள் ஏலம் எடுத்த வாகனத்தின் முழுத் தொகையையும், அதனுடன் சேர்த்து 18 சதவீத (18%) சரக்கு மற்றும் சேவை வரி (GST) உள்ளிட்ட முழுத் தொகையையும் உடனடியாகச் செலுத்திவிட்டு வாகனத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று காவல் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.