ரயிலில் நிரம்பி வழியும் மக்கள் கூட்டம்
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் போக்குவரத்து சேவையும் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இருந்த போதும் தினந்தோறும் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகரித்து காணப்படுகிறது. எனவே கூடுதல் பெட்டிகள் இணைக்க வேண்டும், புதிய ரயில்கள் அறிவிக்க வேண்டும் என தொடர் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பல்வேறு ரயில்களில் கூடுதல் பெட்டிகளும் இணைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று முதல் தமிழகத்தில் 5 புதிய ரயில் சேவையானது தொடங்கப்படவுள்ளது. திருச்சியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி இந்த ரயில்சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
தமிழகத்தில் இன்று புதிய ரயில் சேவை
தமிழகத்தின் போக்குவரத்து உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 11) திருச்சியில் நடைபெறும் விழாவில் இரண்டு ‘அமிர்த பாரத்’ ரயில்கள் உட்பட மொத்தம் ஐந்து புதிய ரயில் சேவைகளைத் தொடங்கி வைக்கிறார். கோயம்புத்தூர் - தன்பாத் இடையே ‘அமிர்த பாரத்’ ரயில் சேவை - பிரதமர் மோடி இன்று திருச்சியில் தொடங்கி வைக்கிறார். மேலும் ராமேஸ்வரம் - மங்களூரு மற்றும் திருநெல்வேலி - மங்களூரு ஆகிய இரண்டு எக்ஸ்பிரஸ் ரயில்கள் கோயம்புத்தூர் வழியாக இயக்கப்பட உள்ளன. இது தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு மாவட்ட மக்கள் கர்நாடக கடற்கரை நகரங்களுக்கு எளிதாகச் செல்ல உதவும். மேலும், காவிரி டெல்டா மாவட்ட மக்களின் நீண்டகாலக் கோரிக்கையை ஏற்று, மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி இடையே புதிய பயணிகள் ரயில் சேவையும் தொடங்கப்படுகிறது.
வெளி மாநில தொழிலாளர்களுக்காக ரயில்
இதுமட்டுமில்லாமல் தமிழகத்தின் தொழில் நகரங்களான கோயம்புத்தூர் மற்றும் திருப்பூரில் பணிபுரியும் லட்சக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்களின் நீண்டகாலக் கனவை நனவாக்கும் வகையில், போத்தனூர் - தன்பாத் அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தின் நிலக்கரி சுரங்கப் பகுதிகளையும், தென்னிந்தியாவின் நூற்பாலை மையங்களையும் இணைக்கும் வகையில் இந்த ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது. வாரந்தோறும் சனிக்கிழமை காலை போத்தனூரில் புறப்பட்டு திங்கள் அதிகாலை தன்பாத் சென்றடையவுள்ளது. நவீன வசதிகள் கொண்ட இந்த ரயிலில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் குறைந்த கட்டணத்தில் படுக்கை வசதி மற்றும் பொதுப் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.
பொள்ளாச்சி - பாலக்காடு இடையே நேரடி மின்சார ரயில்
இதேபோல், இந்தியாவின் தென்கோடி முனையான நாகர்கோவிலிருந்து தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் (சார்லப்பள்ளி) நகருக்கு நேரடி இணைப்பை வழங்கும் நாகர்கோவில் - சார்லப்பள்ளி அமிர்த பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலும் நாளை தொடங்கி வைக்கப்படுகிறது. இது தமிழகம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாலமாக அமையவுள்ளது. மேலும் வேளாண் வணிகத்தில் சிறந்து விளங்கும் பொள்ளாச்சி - பாலக்காடு இடையே நேரடி மின்சார ரயில் சேவையும் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த புதிய ரயில்கள் அனைத்தும் தமிழகத்தின் இரண்டாம் நிலை நகரங்களை நாட்டின் முக்கிய பொருளாதார மையங்களுடன் இணைப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் வேலைவாய்ப்பைப் பெருக்கும் என எதிர்பார்க்கப்படுக்கிறது. இந்த புதிய ரயில் சேவையால் தமிழக மக்கள் மட்டுமின்றி வெளிமாநில தொழிலாளர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
