பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தமிழ்நாடு வருகை தருகிறார்.


மக்களவை தேர்தலுக்கான அறிவிப்பு இன்னும் சில நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிக்க உள்ள நிலையில் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். குறிப்பாக 10 நாட்களில் 12 மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அந்த வகையில் இன்று தமிழ்நாடு வருகை தருகிறார். நடப்பாண்டு தொடங்கி 5 வது முறையாக பிரதமர் மோடி தமிழ்நாடு வருகிறார். கன்னியாகுமரி மாவட்டம் அருகே உள்ள அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகிறார் பிரதமர் மோடி.


இதற்காக இன்று காலை புறப்பட்டு திருவனந்தபுரம் வருகை தருகிறார். அங்கிருந்து ஜெலிகாப்டர் மூலம் புறப்பட்டு காலை 11 மணியளவில கன்னியாகுமரியில் விருந்தினர் மாளிகைக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா மேடைக்கு செல்கிறார். இந்த நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்துகொள்கின்றனர். நிகழ்ச்சியில் உரையாற்றிய பின் அவர் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து புறப்பட்டு கேரள மாநிலம் பத்தினம்திட்டாவிற்கு புறப்படுகிறார். கன்னியாகுமரிக்கு பிரதமர் மோடி வருவதை ஒட்டி அங்கு பலத்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


மக்களவை தேர்தல் வருவதை ஒட்டி பிரதமர் மோடி தமிழ்நாட்டை குறிவைத்து சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அதன்படி, கடந்த ஜனவரி 3ம் தேதி நடைபெற்ற திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் பிரதமர் மோடி கலந்துகொண்டு, மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார். அதோடு, திருச்சி விமான நிலையத்தின்  இரண்டாவது முனையத்தையும் திறந்து வைத்தார். பின், கடந்த ஜனவரி மாதம் 19ம் தேதி நடைபெற்ற கேலே இந்தியா இளைஞர் விளையாட்டின் தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி பங்கேற்றார். அதோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோயில்களுக்குச் சென்றும் இறைவழிபாடு நடத்தினார். கடந்த மாதம் 27ம் தேதி இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி தமிழ்நாடு வந்தார். அப்போது பல்லடத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதோடு, குலசேகரப்பட்டினத்தில் அமைய உள்ள புதிய ராக்கெட் ஏவுதளத்திற்கும் அடிக்கல் நாட்டினார். கடந்த 4ம் தேதி சென்னை நந்தனத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார். அதனை தொடர்ந்து இன்று 5வது முறையாக பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வருகை தருகிறார்.


6வது முறையாக வருகின்ற 18 ம் தேதி பிரதமர் மோடி கோவைக்கு வருகை தருகிறார். அவரின் வருகை முன்னிட்டு, இன்று முதல் 19 ம் தேதி வரை துடியலூர், கவுண்டம்பாளையம், சாய்பாபா காலனி, வடகோவை, ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் ட்ரோன் பறக்க காவல் துறை தடை விதித்துள்ளது. 18 ம் தேதி துடியலூர் முதல் ஆர்.எஸ்.புரம் வரை நடக்கும் ரோடு ஷோவில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.