சுப்ரீம் ஸ்டார் என்று ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் சரத்குமார் கோலிவுட்டில் முற்றிலும் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும். சமீப காலங்களில் ஹீரோ இமேஜுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் நல்ல கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் நடிகர் சரத்குமார்.

Continues below advertisement


புது நடிகர்களின் வருகை ஒவ்வொரு காலக் கட்டத்திலும் புதிய நடிகர்கள் நிறைய அறிமுகமாகிறார்கள். ரஜினி, கமல் தவிர ஒரு காலத்தில் மிகப்பெரிய நடிகர்களாக இருந்தவர்கள் அனைவரும் இன்று இளையத் தலைமுறைக்கு வழிவிட்டு நிற்கிறார்கள். ஆனால் சில நடிகர்கள் நடிப்பின் மீது கொண்ட ஈடுபாட்டால் எல்லா காலத்திலும் தங்களுக்கான இடங்களை நிலை நிறுத்தி வருகிறார்கள்.


உதாரணமாக நடிகர் சத்யராஜை சொல்லலாம். வில்லனாக தொடங்கிய தனது நடிப்பு கேரியரை ஹீரோ வழியில் மாற்றி பின் பல வருடங்கள் கழித்து முக்கியமான குணச்சித்திர கதாபாத்திரங்கள் , நகைச்சுவை கதாபாத்திரங்கள், வில்லன் கதாபாத்திரங்கள் என நாம் பார்க்கும் எல்லா படங்களிலும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு தனது நடிப்பு மற்றும் அனுபவத்தால் சவால் விட்டவர், தற்போது அதே வரிசையில் மீண்டும் ஒரு புதிய அவதாரம் எடுத்திருக்கிறார்.


Comeback கொடுத்த சரத்குமார்


சில வருடங்கள் நடிப்பை விட்டு விலகி இருந்த நடிகர் சரத்குமார் தற்போது வெளியாகும் பல படங்களில் ஏதோ ஒரு கதாபாத்திரத்தில் தோன்றுகிறார். குணச்சித்திர நடிகருக்கான அவரது பயணம் சமுத்திரகனி இயக்கிய நிமிர்ந்து நில் படத்திலேயே தொடங்கிவிட்டது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் பெரிய பழுவேட்டரையராக தோன்றி மிரட்டினார். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த வாரிசு படத்தில் விஜய்க்கு தந்தையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். பின் வெங்கட் பிரபு இயக்கிய கஸ்டடி படத்திலும் நடித்தார்.


போர்த்தொழில்


பின் சமீபத்தில் வெளிவந்து இந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்த போர் தொழில் படத்தில் அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்தார் சரத்குமார். இந்தப் படத்தில் அனுபவம் வாய்ந்த ஒரு போலீஸாக மட்டுமில்லாமல் அனுபவம் வாய்ந்த ஒரு நடிகர் என்பதையும் நிரூபித்தார் சரத்குமார்.


இனி வரவிருக்கும் படங்கள்


தற்போது மேலும் இரண்டு படங்களில் நடித்துள்ளார் நடிகர் சரத்குமார். சி.அரவிந்த் ராஜ் இயக்கியிருக்கும் பரம்பொருள் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். மனோஜ் மற்றும் கிரீஷ் இந்தப் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர். சரத்குமார் உடன் இணைந்து நடிகர் அமிதாஷ் இந்தப் படத்தில் நடித்துள்ளார். ஒரு கடத்தல் கும்பலில் எதிர்பாராமல் இருவர் சிக்கி அவர்களிடம் இருந்து எப்படி தப்பித்து வருகிறார்கள்? என்பதே இந்தப் படத்தின் ஒன்லைன். வருகின்ற செப்டம்பர் 1-ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. நிச்சயம் இது சரத்குமாரின் மற்றுமொரு கம்பேக் திரைப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.