Youtuber Arrest: பிரியாணி மேன் என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தின் வரும் அபிஷேக் ரபி என்பவரை, தமிழக சைபர் கிரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.


யூடியூபர் பிரியாணி மேன் கைது:


பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். பிரபல யூடியூபர் இர்ஃபான் மற்றும் பெண் யூடியூபர்களை பற்றி, பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோக்கள் இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அதோடு, யூடியூப் நேரலையில் அபிஷேக் ரபி தற்கொலை முயற்சியையும் மேற்கொண்டார். தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தான், பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


இர்ஃபான் - பிரியாணி மேன் : மோதல்


கடந்த ஆண்டு மறைமலை நகரில் இர்ஃபானின் கார் விபத்தில் சிக்கியது. இதில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார். அந்த காரை இர்ஃபானின் உறவினர் அசாருத்தீன் ஓட்டியதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் தான் கடந்த ஜூன் மாதம் பிரியாணி மேன் தனது சேனலில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், இர்ஃபான்  தனது அரசியல் செல்வாக்கால் பல்வேறு சர்ச்சைகளில் இருந்து தப்பித்து விடுகிறார் என்று குறிப்பிட்டிருந்தார்.  இதற்கு பதில் அளிக்கும் விதமாக இர்ஃபான் தனது சேனலில் வீடியோ வெளியிட்டார். அதில் தன் மீது அபிஷேக் சுமத்தும் குற்றச்சாட்டுகள் பொய்யனவை என்று  தன்னிடம் உள்ள தரவுகளின் வழி அவர் விளக்கினார். மேலும் பிரியாணி மேனை இந்த வீடியோவில் இர்ஃபான் ஆபாசமான வார்த்தைகளால் திட்டியிருந்தார்.


தற்கொலை முயற்சி:


தொடர்ந்து பிரியாணி மேன் வெளியிட்ட வீடியோவில் இர்ஃபானை கடுமையான ஆபாச வார்த்தைகளால் மோசமாக பேசினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியதைத் தொடர்ந்து பிரியாணி மேன் மீது கடுமையான விமர்சனங்கள் எழத் தொடங்கின. இர்ஃபான் குழந்தையை குறிப்பிட்டு அவர் வீடியோ வெளியிட்டது நெட்டிசன்களின் ஆதரவை இர்ஃபான் பக்கம் திருப்பியது. இதனிடையே, சில பெண் யூடீயூபர்கள் பற்றி பிரியாணி மேன் பேசியிருந்த வீடியோக்களும், வைரலாகி சர்ச்சையாகின. கடந்த ஒரு வார காலமாக இந்த சர்ச்சை பேசப்பட்டு வரும் நிலையில்,  அபிஷேக் யூடியூப் லைவ் வீடியோவில் தற்கொலைக்கு முயன்றார். அதிருஷ்டவசமாக அவர் காப்பாற்றப்பட்ட நிலையில், தற்போது சைபர் கிரைம் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.