அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கையை தொடர்ந்து, உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கௌதம சிகாமணி ஆகியோருக்குச் சொந்தமான இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். குறிப்பாக சென்னை மற்றும் விழுப்புரம் ஆகிய இடங்களில் உள்ள வீடுகள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கல்வி நிலையங்கள் ஆகிய இடங்களிலும், அமைச்சரின் வீட்டு வாசலில் இருந்த கார்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பாதுகாப்பு காரணங்களுக்காக துணை ராணுவப்படையினர் சோதனை நடைபெற்ற பகுதிகளில் குவிக்கப்பட்டனர். வங்கி அதிகாரிகள் அழைத்து வரப்பட்டு, அமைச்சர் மற்றும் அவரது குடும்பத்தினரின் வரவு செலவு சரிபார்க்கப்பட்டது.

Continues below advertisement


இதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தங்களது அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடியை அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.தொடர்ந்து நள்ளிரவில் விசாரணைக்கு முடிந்தபிறகு அமைச்சர் பொன்முடியை அனுப்பிவைத்த அமலாக்கத்துறை அதிகாரிகள், இன்று மாலை 4 மணிக்கு அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகனான கௌதம சிகாமணியை ஆஜராகும்படி தெரிவித்தது. 


இந்தநிலையில், அமைச்சர் பொன்முடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இதுகுறித்து வெளியான அறிக்கையில், “ அமலாக்கத்துறையினர் நடத்திய விசாரணை விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், துணிச்சலுடனும் சட்ட ரீதியாகவும் எதிர்கொள்ளுமாறு அறிவுரை கூறினார்.


மத்திய பாஜக அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கைகளை எதிர்த்து நின்று முறியடிக்க தார்மீக ரீதியாகவும், அரசியல் மற்றும் சட்ட ரீதியாகவும் கழகம் என்றும் துணை நிற்கும் என பொன்முடியிடம் முதலமைச்சர் தெரிவித்தார் .” என தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


பொன்முடியுடன் அமைச்சர்கள் சந்திப்பு..!


சென்னை சைதாப்பேட்டை இல்லத்தில் பொன்முடியுடன் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, ரகுபதி, கே.என்.நேரு, சி.வி.கணேசன், திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா உள்ளிட்டோர் சந்தித்து பேசினர். 


நேற்று அதிகாலை முதல் அமைச்சர் பொன்முடியிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. அமலாக்கத்துறையின் வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள நேரில் ஆலோசனை வழங்கினார் வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ. 


திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, நிர்வாகிகள், தொண்டர்கள் அமைச்சர் பொன்முடி இல்லத்துக்கு வருகை தந்துள்ளனர்.