பெண்கள் குறித்து அருவருக்கத்தக்க வகையில் பேசி சர்ர்சையில் சிக்கிய பொன்முடியிடமிருந்து துணைப் பொதுச்செயலாளர் என்ற முக்கியமான பொறுப்பை பறித்தார் திமுக தலைவரான மு.க.ஸ்டாலின், பின்னர் அவரிடமிருந்த அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டது. இருப்பினும் பொன்முடியின் செயல்பாடுகளில் இதுவரை பெரிதாக எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், மீண்டும் கட்சியில் மீண்டும் பதவியை பெறவும் அமைச்சர் பொறுப்பை பெறவும் தீவிரமாக பொன்முடி செயல்பட்டு வருகிறார். ஆனால், அவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினின் குடும்ப பெண்களே எதிர்ப்பு தெரிவித்துள்ளதால், பதவியையும் பொறுப்பையும் மீண்டும் பெறுவது பொன்முடிக்கு குதிரைக் கொம்பாக மாறியுள்ளது.

தொகுதி மாறுகிறாரா பொன்முடி ?

கடந்த 2016ஆம் ஆண்டு தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்டு அதிமுகவின் சி.வி சண்முகத்திடம் தோல்வி அடைந்தவர் பொன்முடி. பின்னர் நடைபெற்ற 2021 தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதுடன் அமைச்சராகவும் பதவியேற்றார்.

ஆனால், தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியதால் அவரிடமிருந்த உயர்கல்வித் துறை புதிய அமைச்சரான கோவி செழியன் வசம் மாற்றப்பட்டு, பொன்முடிக்கு வனத்துறையை தூக்கிக் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால், அந்த துறையை கொடுத்தாலும் மீண்டும், மீண்டும் திமுகவிற்கும் ஆட்சிக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்கும் வகையில் தொடர்ந்து பொன்முடி பேசியும் செயல்பட்டும் வந்தார். வனத்துறையின் முக்கிய அதிகாரி கூட பொன்முடி மீது ஒரு புகாரை தலைமைச் செயலாளர் முருகானந்தம் வரை கொண்டுச் சென்றதாக அப்போது கூறப்பட்டது.

இந்நிலையில், வரும் 2026 தேர்தலில் தன்னுடைய திருக்கோவிலூர் தொகுதியில் நிற்காமல், விக்கிரவாண்டி தொகுதிக்கு பொன்முடி மாறிச் சென்று தேர்தலில் போட்டியிடவுள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் பொன்முடி, விக்கிரவாண்டி நிர்வாகிகளுக்கு தனியாக விருந்து வைத்ததாகவும் கூறப்படுகிறது.

எடுக்கப்பட்ட ரகசிய சர்வே – பொன்முடி முடிவுக்கு காரணம் இதுதான்

குறிப்பாக, திமுகவிற்கு வரும் 2026 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள் குறித்த ரகசிய சர்வே எடுக்கப்பட்டுள்ளது. அந்த சர்வேயில் மீண்டும் திருக்கோவிலூர் தொகுதியில் பொன்முடி போட்டியிட்டால், அங்கு அவர் வெற்றி பெற மாட்டார் என சர்வே முடிவு வந்துள்ளதாக கூறப்படுகிறது. பொன்முடியின் பெண்கள் குறித்த சர்ச்சைக்குரிய பேச்சாலும், அவர் மற்றவர்களை மதிக்காத வகையில் செயல்படும் தொனியாலும் அவருக்கு மீண்டும் அந்த தொகுதி மக்கள் வாக்களிக்க விரும்பவில்லை என்று அந்த ரகசிய சர்வேயில் மக்களின் கருத்து பதிவு செய்யப்படிருப்பதாகவும் தகவல் கசிந்துள்ளது. இதனையறிந்த பொன்முடி, தன்னுடைய தொகுதியை மாற்றி, வரும் தேர்தலில் விக்கிரவாண்டியில் போட்டியிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளார்.

பொன்முடிக்கு சீட் கிடைக்குமா முதலில் ?

ஆனால், பொன்முடிக்கு இப்போது அமைச்சர் பதவியோ கட்சியில் பொறுப்போ கொடுத்தால் அது மிகப்பெரிய பிரச்னையாக மாறிவிடும் என்பதில் திமுக தலைமை கவனமாக இருந்து வருகிறது. பொன்முடிக்கு திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியே எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், மீண்டும் பொன்முடிக்கு பொறுப்போ, பதவியோ கொடுத்தால் அதற்கும் கனிமொழி கடும் எதிர்ப்பு தெரிவிப்பார், அது கட்சிக்குள் தேவையற்ற சலசலப்புகளை உண்டாக்கும் என்பதால் தேர்தல் முடியும் வரை பொன்முடிக்கு எந்த பொறுப்பும் கொடுக்காமல் இருப்பதே சிறந்த முடிவு என்று அறிவாலயத்தின் முக்கிய முகங்கள் ஆலோசனை கூறியிருப்பதகாவும் கூறப்படுகிறது.

ஏற்கனவே, பொன்முடி ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது வரும் தேர்தலில் எனக்கே சீட் கிடைக்குமா? என்று தெரியவில்லை என்று விளையாட்டாக பேசியிருப்பார். அது தற்போதைய நடைமுறையில் உண்மையாக மாற வாய்ப்பு உள்ளது என்று கூறுகிறார்கள் செனடாப் சாலை வட்டாரங்கள். பொன்முடிக்கு பதில் அவரது மகனுக்கு மட்டும் சீட் கொடுக்கலாம் என்ற முடிவில் இருப்பதாலும், பொன்முடிக்கு கட்சியில் ஏதேனும் ஒரு பொறுப்பு தேர்தல் சமயத்தில அல்லது தேர்தலுக்கு பின்னர் தரலாம் என்ற ஆலோசனையும் சென்றுக்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.