Pongal Buses: இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்துவருகின்றனர். 


இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர். அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது. 



பொங்கல் பண்டிகை:


லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.  வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.  


அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.


கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தீரா குழப்பம்:


ஆனால் இந்த பேருந்துகள் எங்கிருந்து புறப்படும் என்பது குறித்து மக்கள் மத்தியில் தீரா குழப்பம் நீடித்து வருகிறது. இதனை தெளிவு படுத்தும் வகையில் நேற்றைய தினம் தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், " 30.12.2023-க்கு முன்பு முன்பதிவின் போது அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தை (TNSTC) சார்ந்த பேருந்துகளில் கோயம்பேடு, தாம்பரம் மற்றும் பெருங்களத்தூர் பேருந்து நிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ளும் வகையில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திண்டிவனம், விழுப்புரம் மார்க்கமாக பயணிக்க முன்பதிவு செய்திருக்கும் பயணிகள் அதற்கு பதிலாக கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் சென்றடைந்து, அங்கு தாங்கள் கோயம்பேட்டில் முன்பதிவு செய்த அதே நேரத்தில் புறப்படும் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இயக்கப்படும் பிற அரசு போக்குவரத்துக் கழகங்களான விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி பேருந்துகளில் (மூன்றுக்கு இரண்டு இருக்கை (3X2) கொண்டவை) பயணிக்க முன்பதிவு செய்தவர்களும் பிற முன்பதிவு செய்யாத பயணிகளும் விழுப்புரம், திருச்சி, மதுரை மார்க்கமாக தென்மாவட்டங்களுக்கு பயணிக்க கோயம்பேட்டிற்கு வரவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்” என குறிப்பிடப்பட்டது.