பொங்கல் பரிசில் ரொக்கம் தவிர்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாட்டின் பிரதான பகுதிகளிலிருந்து மக்கள் கருத்தை பெற முயன்றது ஏபிபி நாடு. இதோ அவர்களின் கருத்து, அப்படியே...


 


சதீஷ், கம்பம், தேனி மாவட்டம்: 


 



சதீஷ், கம்பம், தேனி


விலைவாசி ஏற்றம், கொரோனா ஊரடங்கு எதிரொலி, பருவமழையின் தாக்கத்தால் பயிர்சேதம் என பல்வேறு சிக்கலில் சிக்கி இருக்கும் மக்களுக்கு தற்போது புதிதாக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் திமுக அரசு பொங்கல் பண்டிகையையொட்டி பரிசுதொகுப்பாக 21 வகையான உணவு பொருட்கள் கொடுப்பது மிகவும் வரவேற்கத்தக்க ஒன்று. ஏனெனில் மிகவும் கீழ்த்தட்டு மக்களுக்கு பொங்கல் அன்று குடும்பத்திற்கு தேவையான உணவு தேவையை பூர்த்தி செய்கிறது. இருப்பினும் தேர்தல் வாக்குறுதியில் கொடுத்த ருபாய் 2500யும் சேர்த்து கொடுத்தால் அவர்களுக்கு தேவையான அத்யாவசியம் அனைத்தையும் பூர்த்தி செய்ய முடியும். தற்போது வரை பொங்கல் பணம் கொடுப்பது குறித்து தமிழக அரசு எந்தவித அறிவிப்பும் கொடுக்காத நிலையில், கீழ்த்தட்டு மக்கள் மற்றும் நடுத்தர குடும்பத்தினரிடையே ஒரு ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. சென்ற அதிமுக ஆட்சியில் இதே பொங்கல் பரிசுடன் நிவாரண தொகையும் கொடுத்தது அன்றைய நேரத்தில் கொரோனா ஊரடங்கில் சிக்கி தவித்த மக்களுக்கு பொங்கலன்று பெரும் உதவியாக இருந்தது.


 


ரேவதி, திருவாரூர்: 


 



ரேவதி, திருவாரூர்: 


‛‛நாங்கள் தினமும் வேலைக்கு சென்று தான் எங்கள் குடும்ப வாழ்க்கையை நடத்தி வருகிறோம்.  வருடம் தோறும் அரசின் சார்பில் பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் அதுமட்டுமின்றி ஆயிரம் ரூபாய் ரொக்கப் பணம் தருவார்கள். கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 2,500 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் பொருட்களை கொடுத்தார்கள். அதே போன்று இந்த ஆண்டும் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் இருந்தோம். ஆனால் பொங்கல் பண்டிகைக்கு வெறும் பொருட்கள் மட்டுமே வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு எங்களுக்கு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. ஏற்கனவே மாதம்தோறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு இதுவரை வழங்கப்படவில்லை தற்பொழுது பொங்கல் பண்டிகைக்குப் பணம் வழங்கப்படாதது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளிப்பதாக தெரிவித்தார்


 


புகழ்மணி:  மறைமலை நகர், செங்கல்பட்டு: 


 



புகழ்மணி, செங்கல்பட்டு


கடந்த முறை முதல்வராக இருந்த எடப்பாடி பழனிசாமி, பொங்கல் பரிசு 2000 ரூபாய் கொடுத்த போது, கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஸ்டாலின் முன்வைத்திருந்தார். இந்திய ஆட்சிப்பணியாளர்கள் தான் தற்பொழுது ஆட்சி புரிந்து வருகிறார்கள். இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அல்ல. மக்களுடைய கஷ்ட நஷ்டங்களை ஐஏஎஸ் படித்தவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. இதை முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.


 கொரோனா இரண்டு அலைகள் காரணமாக பெருமளவில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மழை உள்ளிட்ட காரணங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். பரிசு தொகை இல்லாமல்  கொண்டாடுவதற்கு பதில் , பொங்கல் இல்லை என்று சொல்லிவிட்டுப் போய்விடலாம். அரசு தருகின்ற பணத்தை யாரும் வீணாக செலவு செய்யப் போவது கிடையாது. அனைவரும் குழந்தைகளுடைய படிப்பு செலவு அல்லது அவர்களுக்கு துணி எடுப்பது உள்ளிட்ட தேவையான பணிகள் மட்டுமே இந்த பணம் பயன்படப் போகிறது. பரிசுத்தொகை இல்லாத பொங்கல் வெறும் பொங்கலே. 


எழுத்தாளர் இரா.முருகவேல், கோவை: 


 



எழுத்தாளர் இரா.முருகவேல், கோவை


பொங்கல் பண்டிகையின் போது பரிசுப் பொருட்களுடன் சேர்த்து கொடுத்து கொண்டிருந்த பணத்தை நிறுத்தக் கூடாது. கட்டாயம் மக்களுக்கு கொடுக்க வேண்டும். கடந்த காலங்களில் தேர்தலுக்காக பொங்கலின் போது பணம் கொடுத்திருந்தால் கூட, அதை நிறுத்துவது சரியல்ல. மக்களுக்கு முக்கியமான தேவைகள் உள்ளது. ஊரடங்கு பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு சராசரி நிலைக்கு வரவில்லை. சாலையோர கடை வியாபாரிகள், சிறு வேலைகளுக்கு செல்பவர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. பலருக்கு போனஸ் முறையாக கிடைக்கவில்லை. கடந்த ஆண்டில் கொடுத்ததை விட 10 சதவீதம் சேர்த்து தர வேண்டும்.


 


பிரசாத், மேலூர், மதுரை:


 



பிரசாத், மேலூர், மதுரை


‛‛கடந்த ஆட்சியில் பொங்கல் பரிசுக்கு கொடுத்த 60% பணம் டாஸ்மாக் கடை தான் பரித்துக் கொண்டது. இந்த முறை பணம் கொடுக்காமல் அதற்கு தகுந்த பொருட்களை கொடுப்பது மகிழ்ச்சியே. இதை நான் வரவேற்கிறேன்’’ என்றார்.


இதோ இன்னும் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் கருத்துக்களை பெற்றோம். அவையும், இவற்றோடு ஒத்துப் போகிறது. பலர் தொகை வேண்டும் என்கிறார்கள். ஒரு சிலர், தொகை வேண்டாம் என்கிறார்கள். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண