பொங்கல் பண்டிகை முன்னிட்டு பேருந்துகளில் கூடுதலாக 1 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஜனவரி 15 தைப்பொங்கல், ஜனவரி 16 மாட்டுப் பொங்கல், ஜனவரி 17 உழவர் திருநாள் என வரிசையாக விடுமுறை நாட்கள் வருகின்றன. எனவே, இந்த முறை சனிக்கிழமையன்றே விடுமுறை தொடங்கிவிட்டதால், 13 முதல் 17ஆம் தேதி வரை மொத்தம் 5 நாட்கள் விடுமுறை கிடைக்கிறது.
இதனால் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர். வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.
அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை (இன்று வரை) பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.
இதனால் மக்கள் சொந்த ஊருக்கு செல்ல ஆயத்தம் ஆகியுள்ளனர். 12 ஆம் தேதி முதலே மக்கள் பயணம் மேற்கொள்ள தொட்ங்கியுள்ளனர். நேற்று கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வழக்கமான கூட்டத்தை விட அதிக அளவு மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர். முதல் நாளே சுமார் 1.25 லட்சம் பேர் பேருந்தில் பயணம் மேற்கொண்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊருக்கு செல்லும் நிலையில், சென்னை மாநகரம் சற்று காலியாகியுள்ளது, போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறைந்துள்ளது. வார இறுதி நாளான நேற்றும் இன்றும் கூட்ட நெரிசல் இல்லாமல் இருக்கிறது. ஆனால் மக்கள் சொந்த ஊருக்கு செல்வதால் தேசிய நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் ஊர்ந்து செல்கிறது.
இந்நிலையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ஜனவரி 12 ஆம் தேதி சென்னையிலிருந்து தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 1,260 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு 1,94,880 பயணிகள் பயணம் செய்துள்ளனர். அதனைத் தொடர்ந்து, நேற்று (ஜன.14) தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளில் 1,071 பேருந்துகளும், 1,901 சிறப்புப் பேருந்துகளில் 658 பேருந்துகளும் இயக்கப்பட்டு 85,131 பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
2 நாள்களில் மொத்தமாகச் சென்னையிலிருந்து 5,089 பேருந்துகள் இயக்கப்பட்டு, 2,80,011 பயணிகள் பயணம் செய்துள்ளனர். மேலும் இன்று சென்னையின் பல்வேறு முக்கிய இடங்களிலிருந்து 3,361 சிறப்புப் பேருந்துகளும் இயக்கப்படுகிறது. இச்சிறப்புப் பேருந்துகளில் சென்னையிலிருந்து பயணம் செய்திட இதுவரை 95,352 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர்” என தெரிவித்துள்ளார். முன்பதிவு செய்தவர்கள் தவிர்த்து முன்பதிவு செய்யாத பயணிகள், சொந்த வாகனங்களில் செல்பவர்கள், ரயில் பயணம் என மொத்தமாக 8 லட்சத்துக்கும் அதிகமானோர் பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.