தமிழ்நாட்டின் மிகவும் முக்கியமான பண்டிகையாகவும், அடையாளமாகவும் இருப்பது பொங்கல். பொங்கல் பண்டிகையை அனைவரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று கொண்டாடுவது வழக்கம். சென்னை, திருச்சி, கோவை, மதுரை, நெல்லை, சேலம் போன்ற பெருநகரங்களில் இருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். 

Continues below advertisement

சென்னைக்கு படையெடுக்கும் மக்கள்:

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் இருந்து மட்டும் சுமார் 23 லட்சம் மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக ரயில், பேருந்துகள் மூலமாக படையெடுத்தனர். பொங்கல் பண்டிகைக்காக கடந்த வார வெள்ளிக்கிழமையே புறப்படத் தொடங்கினர். 

பொங்கல் விடுமுறை முழுவதும் முடிந்துள்ள நிலையில், இன்று காலை முதல் வெளியூர் சென்றவர்கள் படையெடுக்கத் தொடங்கியுள்ளனர். குறிப்பாக, தலைநகர் சென்னைக்கு மக்கள் பேருந்துகளில் படையெடுத்து வருகின்றனர். அரசுப் பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இருக்கைகள் நிரம்பி வழிகிறது. 

Continues below advertisement

கட்டண கொள்ளை:

பேருந்துகள் மட்டுமின்றி திருநெல்வேலி, நாகர்கோயில், மதுரை உள்பட தென்தமிழகத்தில் இருந்து சென்னை வரும் ரயில்களும் முழு அளவில் இருக்கைகள் நிரம்பி வந்து கொண்டிருக்கிறது. தனியார் பேருந்துகள் பயணிகள் கூட்டத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி 4 மடங்கு அளவில் டிக்கெட்டுகளை உயர்த்தியுள்ளனர். நெல்லை, மதுரை, நாகர்கோயில் போன்ற தென்மாவட்டங்களில் இருந்து வரும் தனியார் பேருந்துகள் குறைந்தது 3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கின்றனர். 

பேருந்துகள் மட்டுமின்றி கார்கள், இரு சக்கர வாகனங்களிலும் மக்கள் சென்னைக்கு திரும்பி வருகின்றனர். இதனால், நெடுஞ்சாலையின் சில இடங்களில் போக்குவரத்து நெரிசலாக காணப்படுகிறது. திருச்சி - மேல்மருவத்தூர் செல்லும் நெடுஞ்சாலை இன்று மதியம் போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்தது. 

திணறும் சென்னை நுழைவுவாயில்:

மாலை முதல் திண்டிவனத்தில் இருந்து சென்னை நோக்கி வரும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. விக்கிரவாண்டி, பரனூர் சுங்கச்சாவடிகளில் வழக்கமாகவே போக்குவரத்து நெரிசல் காணப்படும் என்பதால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், தென்மாவட்ட பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்களில் மக்கள் மாலை முதல் அதிகளவில் குவிந்து வருகின்றனர். இதனால், அவர்களின் பாதுகாப்பு கருதி வழக்கத்தை விட அதிகளவு காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

நெடுஞ்சாலைகளில் விபத்துக்களை தடுக்கும் நோக்கிலும் அதற்கான முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டுள்ளது. பயணிகளின் வசதிக்காக அரசு சார்பில் ஆயிரக்கணக்கான சிறப்பு பேருந்துகளும், தென்னக ரயில்வே சார்பில் சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.  பயணிகளின் கூட்டம் கருதி பல இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.