Jallikattu Madurai : தமிழர் திருநாளாக தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகை உலகெங்கும் வாழும் தமிழர்களால் கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை என்றாலே கரும்புகள், சொந்த ஊர் திரும்பும் மக்கள், கோயிலில் குவியும் மக்கள் ஆகியோருக்கு நிகராக மக்கள் நினைவுக்கு வருவது ஜல்லிக்கட்டு.


ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே  அனைவருக்கும் நினைவுக்கு வருவது மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளே. மதுரையில் நடைபெறும் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலகப் புகழ் பெற்றது ஆகும். இங்கு நடைபெறும் போட்டிகளை காண தென் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மக்கள் திரளாக படையெடுத்து செல்வார்கள்.


அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ( தைப்பொங்கல்):


தைத் திங்கள் முதல் நாளான தைப்பொங்கல் பண்டிகையன்று ஆண்டுதோறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது. இந்தாண்டும் நாளை மறுநாள்( 15ம் தேதி) அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறுகிறது. திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள மைதானத்தில் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.


பாலமேடு ஜல்லிக்கட்டு ( மாட்டுப் பொங்கல்):


மாட்டுப் பொங்கல் தினத்தில் ( வரும் 16ம் தேதி) நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி பாலமேடு ஜல்லிக்கட்டு ஆகும். மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட பாலமேடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள மஞ்சமலை ஆறு திடலில் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது.


அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: (காணும் பொங்கல்)


மதுரையில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளிலே அவனியாபுரம், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகளை காட்டிலும் அதிகளவு மக்களால் எதிர்பார்க்கப்படுவது அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு ஆகும். காணும் பொங்கல் பண்டிகை தினத்தில் ஆண்டுதோறும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் 17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.


புகழ்பெற்ற இந்த மூன்று இடங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் நூற்றுக்கணக்கான காளைகளும், அந்த காளைகளை அடக்குவதற்கு ஏராளமான இளைஞர்களும் களமிறங்குவார்கள். காளைகளும், காளையர்களுக்கும் முறையான முன்பதிவு செய்யப்பட்டு, மருத்துவ பரிசோதனை செய்யப்பட்ட பிறகே களத்திற்குள் களமிறக்க அனுமதிக்கப்படும்.


மதுரையில் புத்தாண்டு தொடங்கியது முதலே இளைஞர்கள் காளைகளை அடக்குவதற்கு பயிற்சி எடுத்து வருகின்றனர். அதேபோல, காளைகளுக்கும் வீரர்களிடம் பிடிபடாமல் இருப்பதற்கு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. 


புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் தவிர தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகள் தொடர்ந்து நடத்தப்படுவது வழக்கம் என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Jallikattu 2024: திருச்சியில் முதல் ஜல்லிக்கட்டு சூரியூரில் வரும் 16ம் தேதி தொடக்கம்..வீரர்கள் உற்சாகம்


மேலும் படிக்க: Pongal Wishes: 'உழவர் பெருமக்கள் தெய்வப் பண்புள்ளவர்கள்' - பொங்கல் வாழ்த்து கூறிய எடப்பாடி பழனிசாமி..