கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம் சென்னையில் விசாரணை நடத்தப்பட்டது. கொலை, கொள்ளை தொடர்பாக பல கேள்விகள் சசிகலாவிடம் சரமாரியாக கேட்கப்பட்டதாக தகவல். குறிப்பாக, பங்களாவின் சாவி யாரிடம் இருக்கும் ? சம்பவத்தின்போது பணியில் இருந்தவர்கள் யார் யார் ? கனராஜ் போயஸ் தோட்டத்தில் பணியாற்றினாரா ? சம்பவத்திற்கு பிறகு பங்களாவை நேரில் சென்று பார்த்தீர்களா ? கோடநாடு பங்களாவில் இருந்த ஊழியர்கள் / காவலர்கள் எத்தனை பேர்?அவர்களையெல்லாம் பணிக்கு அமர்த்தியது யார் ? பங்களாவில் என்னென்ன பொருட்கள் இருந்தன? உள்ளிட்ட பல கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. 


கோடநாடு பங்களாவிற்கு விசாரணைக்கு அழைத்தால் வருவீர்களா ? என்ற கேள்விக்கு நிச்சயம் வருவேன் என சசிகலா பதில் அளித்துள்ளார். மேலும், கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உண்மை குற்றவாளிகளை கண்டுபிடிக்க நான் எந்தவிதமான விசாரணையை எதிர்கொள்ளவும் தயார் என சசிகலா விசாரணையில் தெரிவித்துள்ளார். 


சென்னை தியாகராய நகரில் இருக்கும் சசிகலாவின் இல்லத்தில் இன்று காலை விசாரணையைத் தொடங்கியது தனிப்படை. சுமார் இரண்டு மணிநேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த விசாரணையில் பல்வேறு கேள்விகள் சசிகலாவிடம் கேட்கப்பட்டிருக்கிறது. கொடநாட்டில் ஜெயலலிதாவுடன் இருந்தவர் என்ற வகையிலும், அங்கு என்னென்ன பொருள்கள், ஆவணங்கள் இருந்தது என்பதை அறிந்தவர் என்ற வகையிலும் சசிகலாவிடம் நடந்தப்படும் இந்த விசாரணை முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. ஐஜி சுதாகரன் தலைமையிலான 8 பேர் கொண்ட தனிப்படை போலீஸார் இந்த விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்


முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சசிகலாவின் அண்ணன் மகனும் ஜெயா டிவியின் சி.இ.ஓ.வுமான  விவேக் ஜெயராமன் விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டார். இந்நிலையில் கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் இன்று சசிகலாவிடம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கோடநாடு விவகாரத்தில் சசிகலாவின் விசாரணை முக்கிய திருப்பங்களை ஏற்படத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


நடந்தது என்ன?


கோடநாடு வழக்கில் பிடிபட்ட கொள்ளையர்களிடமிருந்து கைப்பற்றப்பட்டது சில கைக் கடிகாரங்களும் குரங்கும் பொம்மையும்தான் என போலீசார் தெரிவித்த நிலையில், உண்மையில் கோடநாடு பங்களாவில் என்ன இருந்தது என்பது அந்த பங்களாவிற்குள் ஜெயலலிதாவோடு சென்று வந்த சசிகலா, தினகரன், விவேக், இளவரசி உள்ளிட்டோருக்குதான் தெரியும் என்று கூறப்பட்டு வந்தது. அதனால், போலீசார் சசிகலா-வையும் அவருடன் தொடர்புடையோர்களையும் விசாரணை வளையத்திற்கு கொண்டுவந்தால் மட்டுமே கொள்ளை எதற்காக நடந்தது ? அங்கு என்ன இருந்தது என்பது தெரியும் என பேசப்பட்டு வந்த நிலையில், முதலில் விவேக்கிடம் போலீசார் விசாரணையை தொடங்கினர். 


கொள்ளை நடந்த நாளில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்தார் என்பதால், அந்த நேரத்தில் அவரை சிறையில் சென்று பார்த்தவர்களில் விவேக் ஜெயராமன், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்களாவோடு தொடர்புடையவர்கள் என்பதால், முதலில் விவேக், அடுத்து தினகரன், பின்னர் சசிகலாவிடம் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்