செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஏராளமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன. எதிர்காலத் தூண்களாக விளங்க வேண்டிய இந்த கல்லூரி மாணவர்களைக் குறிவைத்து, அவர்களின் வாழ்க்கையைச் சீரழிக்கும் நோக்கில் தங்கு தடையின்றி கஞ்சா விற்பனை நடப்பதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடும் இந்த போதை கும்பலை வேரறுக்க வேண்டும் என்ற நோக்கில், போலீசார் தங்களது ரோந்துப் பணியையும் கண்காணிப்பையும் தீவிரப்படுத்தினர்.

Continues below advertisement

சாமியார் கேட் ரகசிய அறையில் அதிரடி ஆபரேஷன்

போலீசாரின் தீவிர விசாரணையில், பேரமனூர் சாமியார் கேட் பகுதியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வீட்டில் இருந்துதான் கல்லூரி மாணவர்களுக்குத் தந்திரமாக கஞ்சா சப்ளை செய்யப்படுகிறது என்ற 'ஹாட்' தகவல் கிடைத்தது. சற்றும் தாமதிக்காத போலீசார், அந்த வீட்டை ரகசியமாகக் கண்காணித்து, பின்னர் அதிரடியாக உள்ளே புகுந்து சோதனையிட்டனர். அங்கு கல்லூரி மாணவர்களைத் தன் மாயவலையில் வீழ்த்தி, கஞ்சா வியாபாரத்தில் கொடிகட்டிப் பறந்த 'கோல்டு கோகிலா' (40) என்ற பெண் போலீசாரிடம் கையும் களவுமாக மாட்டினார்.

2 கிலோ கஞ்சா பறிமுதல் & போலீஸ் பாணி விசாரணை

அந்த வீட்டின் ரகசிய அறைகளில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், பதுக்கி வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 200 கிராம் கஞ்சா மற்றும் ரொக்கப் பணம் பறிமுதல் செய்யப்பட்டன. இதையடுத்து கோல்டு கோகிலாவை போலீசார் கூண்டோடு தூக்கினர். கைது செய்யப்பட்ட அவரிடம் போலீசார் தங்களது பாணியில் விசாரணையை முடுக்கினர். கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா எப்படி கைமாறுகிறது, இதன் பின்னணியில் இருந்து இயக்கும் முக்கிய புள்ளிகள் யார் யார், எங்கிருந்து போதைப்பொருள் கடத்தி வரப்படுகிறது என்பது குறித்து கோல்டு கோகிலா பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளதாகத் தெரிகிறது.

Continues below advertisement

நீதிமன்ற காவலில் சிறையிலடைப்பு

வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்த மறைமலைநகர் போலீசார், கோல்டு கோகிலாவை செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மாணவர்களைப் போதை அடியாழத்திற்குத் தள்ளி, அதில் காசு பார்க்க நினைத்த கோல்டு கோகிலாவின் கஞ்சா சாம்ராஜ்யம் போலீசாரின் அதிரடி ஆக்ஷனால் சல்லிசல்லியாக நொறுக்கப்பட்டுள்ளது. இந்த அதிரடி நடவடிக்கை மறைமலைநகர் பகுதியில் உலா வரும் மற்ற கஞ்சா ஆசாமிகளுக்கும், போதை கும்பலுக்கும் போலீசாரால் கொடுக்கப்பட்ட மரண பய காட்டிய பலத்த எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது.