”வாழ்க நிரந்தரம்.. வாழ்க தமிழ்மொழி..வாழிய வாழிய வே!” என்ற வரிகளுடன் பாரதியாரின் நினைவு தினம் இன்று (11.09.2023) என்பதை குறிப்பிடுவது சரியானதாக இருக்கும். பள்ளிப் பருவத்தில் ஒரு சில பாரதியார் கவிதைகள் வாசிக்காதவர்களே இல்லை என சொல்லிவிடலாம். எழுச்சிமிகு வார்த்தைகளால் என்றும் மனதில் நிற்பவர் பாரதியார். தமிழ், தேசம், காதல் ஆகியவற்றின் மீதான காதல், இதில் சுதந்திர வேட்கையை எழுச்சியுடன் கவிதைகளை மீட்டவர் பாரதியார். 


பாரதியார் பதினொன்றாம் வயதிலிருந்தே கவிதைகளை எழுத தொடங்கிவிட்டார். சில காலம் வசித்து வந்தவர், மீண்டும் தமிழ்நாடு வந்து மதுரை சேதுபதி பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சுதேச மித்ரன் பத்திரிகையில் ஆசிரியராக பணியாற்றினார். நாட்டின் விடுதலைப் போராட்ட காலகட்டத்தில் தன் படைப்புகளின் மூலம் சுதந்திர வேட்கையை மக்களிடம் கொண்டு சேர்த்தார். சுதந்திர உணர்வு மட்டுமல்லாமல் காதல், தெய்வீகம்,ரெளத்திரம், பண்பாடு உள்ளிட்டவற்றை தன் கவிதைகளில் வடித்து சிந்தனைக்கான வழியை ஏற்படுத்தினார். பாரதியாரின் கவிதைகளை ரசிக்காதவர்களே இருக்க முடியாது. 


“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம்” தமிழ் மொழி மீது தீரா காதல் கொண்டிருந்த பாரதியார் காதல் கவிதைகள் நம்மில் பலருக்கும் காதலை வெளிப்படுத்தும் மொழியாக இருக்கும். பாரதியாரின் இறுதி காலம் என்பது  சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள இல்லத்தில்.  39-ஆவது வயதில் 1921-ஆம் ஆண்டு செப்டம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு 1:30 மணிக்கு மேல் இறந்துள்ளார். அவர் இறந்தது நள்ளிரவு 12 மணிக்கு மேல் என்பதால்,  செப்டம்பர் 12-ஆம் தேதி பாரதியார் இறந்ததாக குறிப்பிட்டு அவரது இறப்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அப்போதைய மரபு வழக்கப்படி சில புத்தகங்களிலும், பேச்சுவழக்கிலும் பாரதியார் செப்டம்பர் 11-ஆம் தேதி இறந்ததாகவே குறிப்பிடப்பட்டு, பின்னர் அதுவே நிலைத்து விட்டது. 2021 ஆம் ஆண்டு மகாகவி பாரதியாரின் நூற்றாண்டு நினைவு நாளில் பாரதியாரின் பங்களிப்பை போற்றும்விதமாக அவருடைய நினைவு நாளை ‘மகாகவி நாளாக’ தமிழ்நாடு அரசு அறிவித்தது. பாரதியை பற்றி எழுத நிறைய இருக்கிறது. தன் எழுத்தில் பல்வேறு புரட்சிகரமான சிந்தனைகளை விதைத்தவரின் பங்களிப்பினை எப்போதும் கொண்டாடப்பட வேண்டியதாகும்


பாரதியாரின் நினைவு நாளன்று அவருடைய கவிதைகளில் சில பகுதிகள் வாசிப்பதற்காக இதோ


விசையுறு பந்தினைப்போல் – உள்ளம் 


வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன், 


நசையறு மனங்கேட்டேன் – நித்தம் 


நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,


 தசையினைத் தீசுடினும் – சிவ 


சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,


அசைவறு மதிகேட்டேன் – இவை அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?


***


அன்பு செய்தல்


இந்தப் புவிதனில் வாழும் மரங்களும்


இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்


அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்


ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்


எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?


மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்



வரம்பு கட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்


வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்


வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்குமென்றே?


யானெதற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்


என்மதத்தைக் கைக் கொண்மின்;பாடுபடல்வேண்டா;


ஊனுடலை வருத்தாதீர்;உணவியற்கை கொடுக்கும்;


உங்களுக்குத் தொழிலிங்கே அன்புசெய்தல் கண்டீர்!


தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை


மகாகவி பாரதியாரின் 102-வது நினைவு தினத்தை முன்னிட்டு சென்னை மெரினாவில் உள்ள பாரதியார் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், சேகர்பாபு, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.