திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாமக இடம்பெறும் என்று அக்கட்சியின் தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

Continues below advertisement


'தமிழக மக்கள் உரிமை மீட்பு' பயணம் என்ற பெயரில் அன்புமணி ராமதாஸ் 108 நாட்கள் நடைபெறும் மேற்கொண்டார். ஜூலை 25ஆம் தேதி திருப்போரூரில் தொடங்கிய இந்த நடைபயணம் நவம்பர் 9ஆம தேதி தர்மபுரி மாவட்டத்தில் நிறைவடைந்தது. இந்த நடைபயணத்தில் தான் விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் என பலதரப்பட்ட மக்களை சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டு அறிந்ததாக அன்புமணி தெரிவித்தார். 


இந்த நடை பயணத்தின் மூலமாக கிடைத்த அனுபவம் குறித்து சென்னை எழும்பூரில் உள்ள தனியார் விடுதியில் பத்திரிகையாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் முதலில் ஆரம்பம் முதல் கடைசி வரை தான் மேற்கொண்ட நடை பயணம் தொடர்பான காணொளியை வெளியிட்டார். அதில் பல்வேறு தரப்பு தொழிலாளர்களை சந்திப்பது மக்களின் குறைகளை கேட்டு அறிவது, ஆறுகள், ஏரிகளை பார்வையிடுவது உள்ளிட்ட வீடியோக்கள் செய்தியாளர்களுக்கு ஒளிபரப்பு செய்யப்பட்டது. 


தமிழக அரசுக்கு அழுத்தம்


பிறகு பத்திரிகையாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், தன்னுடைய 28 ஆண்டுகால அரசியல் அனுபவத்தில் இந்த 108 நாட்கள் மிகவும் முக்கியமான தினமும் இந்த நடை பயணத்தின் மூலமாக தான் சுட்டிக்காட்டிய சில பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். மற்ற பிரச்சனைகளுக்கு தீர்வு காணுவதற்கு தொடர்ந்து தமிழக அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகவும் பல கட்ட போராட்டங்களின் மூலமாக மற்ற பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்க பாமக போராடும் என்று தெரிவித்தார். 


வடசென்னையில் தமிழக அரசு செயல்படுத்தும் குப்பை எரி உலை திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் எனவும் அதன் காரணமாக புற்றுநோய், இதய நோய் ஆஸ்துமா உள்ளிட்ட பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் சுட்டி காண்பித்தார். ராணிப்பேட்டை குரோமிய கழிவுகளை அகற்ற எழுநூறு கோடி ரூபாயில் திட்டத்தை உருவாக்க வேண்டும் எனவும் அந்த மாவட்டத்தில் உள்ள அமைச்சர் காந்தி இது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் செயல்படுவதாகவும் குற்றம் சாட்டினார். 


தமிழகத்தில் மாம்பழம் விளைவிக்கும் விவசாயிகளுக்கு இந்த ஆண்டு கடுமையான நஷ்டம் ஏற்பட்டது. அதனை தவிர்க்க இனி ஆந்திரா, கர்நாடகாவில் வழங்கப்படுவது போல குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வேண்டும். அதாவது ஒரு டன் மாம்பழத்திற்கு 25 ஆயிரம் வரை கொள்முதல் விலையை நிர்ணிக்க வேண்டும். திருவண்ணாமலை மாவட்டத்தில் சிப்காட் கொண்டு வரக்கூடாது என்று போராடிய விவசாயிகளை குண்டர் சட்டத்தில் அடைத்த கொடூரமான அரசாக திமுக அரசு திகழ்ந்து வருவதாக குற்றச்சாட்டை முன் வைத்தார்.


வள்ளலாரின் சாபம் சும்மா விடாது


வள்ளலாரின் சாபம் திமுகவை சும்மா விடாது என ஆவேசமாக பேசிய அன்புமணி, வள்ளலார் பெருவழி இடத்தை வள்ளலார் பன்னாட்டு மையமாக அமைப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்தார். தொடர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொண்டால் வள்ளலாரின் சாபம் சும்மா விடாது எனவும் குறிப்பிட்டார். 


தமிழ்நாட்டில் போதுமான நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லை எனவும் தமிழகத்தில் ஆண்டுதோறும் 45 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்படும் நிலையில் தமிழக அரசிடம் வெறும் 18 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட கிடங்குகள் மட்டுமே உள்ளது. இது போதுமானது அல்ல என கூறினார். மேலும், தமிழ்நாட்டில் விளையும் நெல்லில் மூன்றில் ஒரு பங்கை தான் தமிழக அரசு கொள்முதல் செய்கிறது மீதமுள்ள இரண்டு பங்கு நெல் தனியாரிடம் விற்பனை செய்யப்படுகிறது. தமிழகத்தில் நெல்மணிகள் உரிய நேரத்தில் கொள்முதல் செய்யப்படாத காரணத்தால் ஆண்டுதோறும் லட்சக்கணக்கான டன் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமாகிறது. தமிழக அரசு இதற்காக தனியாக நிதி ஒதுக்கி விவசாயிகளின் இழப்பை தடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


இந்தியாவிலேயே மிகவும் மாசடைந்த நதிகளாக 37 நதிகள் உள்ளது. அவற்றில் 5 நதிகள் தமிழ்நாட்டில் உள்ளதாகவும் அன்புமணி குறிப்பிட்டார். கூவம் ஆறு, அடையாறு ,சரபங்கா நதி, திருமணிமுத்தாறு, வசிஷ்ட நதி ஆகியவை மிக மிக மாசடைந்த நதிகளாக உள்ளது என குற்றம் சாட்டினார். அவற்றை சரி செய்ய திமுக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் தெரிவித்தார்.


பாமக யாருடன் கூட்டணி


பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த அன்புமணி ராமதாஸ், 2026 சட்டமன்றத் தேர்தலில் கூட்டணி குறித்த கேள்விக்கு திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றும் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இடம்பெறும் என்றும் கூட்டணி மந்திரி சபை அமையுமா என்பது குறித்து இப்போது சொல்ல முடியாது தேர்தல் முடிவுகள் வந்த பிறகுதான் சொல்ல முடியும் என்றும் தெரிவித்தார். 


வெளிநாட்டு தொழில் முதலீடுகள் சம்பந்தமாக தான் எந்த காழ்ப்புணர்ச்சியிலும் பேசவில்லை என்று அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு பதில் அளித்த அன்புமணி, உண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துள்ள முதலீடுகளை ஆவண புத்தகமாக வெளியிடிருப்பதாகவும் இதற்கு தமிழக அமைச்சர்கள் முதலமைச்சர் உள்ளிட்டோர் பதிலளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..


தொடர்ந்து ஆவேசமான அன்புமணி, தொழில் முதலீடுகள் சம்பந்தமாக மேடை போடுங்கள் விவாதத்திற்கு வர நான் தயார் திமுக என்னுடன் விவாதம் செய்ய தயாரா என்று ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.