ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.


இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே கல்லூரி மாணவர் ஒருவர் ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக மூதாட்டியை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்திருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. இத்தகைய கொடூரம்  இதுவே கடைசியாக இருக்க வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்தவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சோகம் இதுவரை நடந்து வந்தது. இப்போது பணத்துக்காக கொலை செய்யும் கொடூர நிகழ்வுகள் அரங்கேறத் தொடங்கியிருப்பதிலிருந்தே ஆன்லைன் சூதாட்டம் இன்னும் கொடிய வடிவம் எடுப்பதை அறிய முடியும். ஆன்லைன் சூதாட்டங்களை ஒழிப்பதன் மூலம் தான் தற்கொலைகளையும், இளைய தலைமுறையினரின் சீரழிவையும் தடுக்க முடியும். அதற்காக உடனடி நடவடிக்கைகளை  தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பு ஆகும். ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் முன்னேற்றம் இல்லாமல் கிடக்கிறது. அதில் சாதகமான தீர்ப்பும் கிடைக்காது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய புதிய சட்டத்தை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.


 






முன்னதாக, ஆன்லைன் சூதாட்டம் தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது அவர் பேசுகையில், ஆன்லைன் சூதாட்டம் குறித்து எந்த சட்டமும் தமிழ்நாட்டில் இதுவரை பிறப்பிக்கப்படவில்லை என்றும், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் சில இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், சென்னை மெட்ரோ ரயில் ஊழியர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை குறிப்பிட்டும் பேசினார். மேலும், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இபிஎஸ் வலியுறுத்தினார்.


இதற்கு பதிலளித்து பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, ஆன்லைன் சூதாட்டத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் திமுக அரசு உறுதியாக உள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் இதுதொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதாகவும் வழக்கில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறினார்.


தொடர்ந்து பேசிய அமைச்சர், கடந்த ஆட்சியில் அவசரமாக கொண்டு வரப்பட்ட சட்டத்தை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதாகவும், அரசு வழக்கறிஞர்களிடம் ஆலோசித்து தற்போது ஆன்லைன் சூதாட்டத்தை ரத்து செய்ய உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளதாகவும், உச்சநீதிமன்றத்தில் நல்ல முடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் விளக்கமளித்திருந்தார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண