பாட்டாளி மக்கள் கட்சி புதுச்சேரி மாநில கட்சி என்ற அந்தஸ்தை இழந்த நிலையில், தேர்தலில் இனி மாம்பழ சின்னத்தில் போட்டியிட முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கட்சிகளுக்கான அந்தஸ்து:
இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கான் தேசிய மற்றும் மாநில கட்சி அந்தஸ்தானது குறிப்பிட்ட சதவிகித வாக்குகள், எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வழங்கப்படும். இந்த அங்கீகாரமானது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படும்.
மாநில கட்சி அந்தஸ்தை இழந்த பாமக:
இந்த நிலையில், நடப்பாண்டிற்கான தேசிய கட்சிக்கான அங்கீகாரம் மற்றும் மாநில கட்சிக்கான அங்கீகாரம் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி பா.ம.க. (புதுச்சேரி), ராஷ்டிரீய லோக்தளம் (உத்தரபிரதேசம்), பாரதிய ராஷ்டிர சமிதி (ஆந்திரா), பி.டி.ஏ. (மணிப்பூர்), புரட்சிகர சோசலிச கட்சி (மேற்கு வங்காளம்), எம்.பி.சி. (மிசோரம்) ஆகிய கட்சிகள் மாநில கட்சி அந்தஸ்தை இழந்து உள்ளன.
பாமகவிற்கு பின்னடைவு:
மாநில மற்றும் தேசிய கட்சி அந்தஸ்தை பெற்ற கட்சிகளால் மட்டுமே பொதுதேர்தல்களில் ஒரே சின்னத்தில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட முடியும். ஆனால், தற்போது புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியானது மாநில கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது. இதனால் அடுத்து வரும் புதுச்சேரி சட்டமன்ற பொதுத்தேர்தலின்போது, மொத்தமுள்ள 30 தொகுதிகளிலும் பாமக ஒருவேளை தனித்து போட்டியிட்டால், அந்த வேட்பாளர்கள் பொதுவான மாம்பழை சின்னத்தை பயன்படுத்த முடியாது எனவும், மாறாக ஒவ்வொரு வேட்பாளருக்கும் தனித்தனி சின்னங்கள் குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதேநேரம், மாநில கட்சிக்கான அந்தஸ்தை இழந்த உடனே பொதுச்சின்னத்தை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகாது எனவும், சுமார் 6 வருடங்கள் வரையில் பாமக பொதுச்சின்னமான மாழ்பழத்தையே பயன்படுத்த தேர்தல் ஆணையம் அனுமதிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அப்படி இல்லாவிட்டால் இது பாமகவிற்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. அதோடு, அண்மையில் தான், அன்புமணி ராமதாஸ் பாமகவின் தலைவராக பொறுப்பேற்ற நிலையில், தேர்தல் ஆணைம் வெளியிட்டுள்ள அறிவிப்பு அக்கட்சி தொண்டர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய கட்சியானது ஆம் ஆத்மி:
இதனிடையே, டெல்லியில் மட்டுமின்றி பஞ்சாபிலும் ஆட்சியை பிடித்துள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி என்ற அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சியினருக்கு மிகப்பெரிய உத்வேகத்தை அளித்துள்ளது. அடுத்தாண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம் ஆத்மி கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், நாட்டின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளாகவும், தேசிய கட்சிகளாகவும் இருந்து வந்த சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த தேசிய கட்சிக்கான அங்கீகாரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கட்சிக்கான தகுதி:
நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களில் 6 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றால் ஒரு கட்சிக்கு தேசிய கட்சி அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் வழங்குகிறது. இது மக்களவை அல்லது சட்டசபை தேர்தலாக இருக்க வேண்டும். மேலும், ஏதாவது ஒரு மாநிலத்திலாவது 4 மக்களவை தொகுதியில் கட்டாயம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். சரத்பவாரின் தேசியவாத காங்கிரசுக்கு 2000ம் ஆண்டும், திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு 2016ம் ஆண்டும் தேசிய கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டது.
வடகிழக்கு மாநிலங்கள்:
அதேசமயம், வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் சிராக் பஸ்வானின் லோக் ஜன்சக்தி கட்சிக்கு மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்தாண்டு நடைபெற்ற மாநில சட்டசபை தேர்தலில் அந்த கட்சி 98 ஆயிரத்து 971 வாக்குகளுடன் 2 தொகுதிகளை கைப்பற்றியதால் மாநில கட்சி அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது.
திரிபுரா மாநிலத்தில் முக்கிய தலைவரான பிரத்யோத் டேப் பர்மாவின் திப்ராமோதா கட்சி கடந்த சட்டசபை தேர்தலில் 13 தொகுதிகளில் போட்டியிட்டு 20 சதவீத வாக்குகளை பெற்றதால் மாநில கட்சி அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் பி.டி.ஏ., ஆந்திராவில் பி.ஆர்.எஸ்., மேற்கு வங்காளத்தில் ஆர்.எஸ்.பி., மிசோரத்தில் எம்.பி.சி., ஆகிய கட்சிகளின் மாநில அந்தஸ்து ரத்து செய்யப்பட்டுள்ளது.