ராமதாஸூடன் தகராறு.. சூழ்ச்சி செய்தது ஜி.கே.மணி தான்.. அன்புமணி பரபர குற்றச்சாட்டு!
நானும் நிறைய அவமானங்கள் பட்டிருக்கிறேன். மன உளைச்சல், தூக்கம் இல்லாத நாட்கள் என பல விஷயங்களை இந்த கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும், வன்னிய சமுதாய மக்களுக்காகவும் தாங்கிpa கொண்டிருக்கிறேன்.

ராமதாஸூக்கும், எனக்கும் சூழ்ச்சி செய்து பிரித்தவர் ஜி.கே.மணி தான் என அன்புமணி ராமதாஸ் பகிரங்கமாக விமர்சித்துள்ளது பாமகவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் பாமக சார்பில் ஒன்றியம், நகரம், பேரூர், மாநகராட்சி பகுதி செயலாளர்கள் மற்றும் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இன்றைய கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், நான் கடந்த 6 மாதங்களில் கட்சியில் அதிகளவில் சந்தித்தது மாவட்ட செயலாளர்களை தான். கடந்த காலங்களில் ஒவ்வொரு 15 நாட்களுக்கும் மாவட்ட செயலாளர்களை சந்திக்கும் சூழல் உண்டானது. மாநில நிர்வாகிகள், தொகுதி பொறுப்பு நிர்வாகிகளை சந்தித்து வருகின்றேன். நம்முடைய கட்சிக்குள் குழப்பம் நிலவுகிறது. அதற்கென பாமகவுக்குள் இருக்கும் தீய சக்திகள் டாக்டர் ராமதாஸை சுற்றி இருக்கிறார்கள்.
நானும் இதுவும் கடந்து போகும் என எவ்வளவோ தாங்கிக் கொண்டிருக்கிறேன். நிறைய அவமானங்கள் பட்டிருக்கிறேன். மன உளைச்சல், தூக்கம் இல்லாத நாட்கள் என பல விஷயங்களை இந்த கட்சிக்காகவும், தொண்டர்களுக்காகவும், வன்னிய சமுதாய மக்களுக்காகவும் தாங்கி கொண்டிருக்கிறேன். ஆனால் ராமதாஸ் இன்றைக்கு இருக்கும் மனநிலைக்கு கொண்டு வந்திருக்கும் துரோகிகளை ஒருபோதும் நான் மன்னிக்க மாட்டேன்.
என்ன நடக்கும் என பார்த்துக் கொண்டிருக்கிறேன். இன்னும் 3 மாதங்களில் யார் யாரெல்லாம் ஜெயிலுக்கு போகிறார்கள் என்பதைப் பாருங்கள். டாக்டர் ராமதாஸிடம் தினம் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். 87 வயதான் அவர் ஒரு குழந்தைப் போல மாறி விட்டார். இவர்கள் சொல்லும் பொய்யை தான் அவர் நம்பிக் கொண்டிருக்கிறார்.
டெல்லியில் 30 பேர் போராடி விட்டு அவரிடம் 3 ஆயிரம் பேர் போராடினோம் என சொல்ல அவரும் அப்படியா என பாராட்டியிருக்கிறார். என்னுடைய நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் கூட்டம் இல்லை என ராமதாஸிடம் தெரிவிக்கிறார்கள் என கூறினார்.
அப்போது ஜி.கே.மணியை குறிப்பிட்டு பேசிய அவர், “25 வருடமாக அவரை தலைவராக்கி அழகு பார்த்தவர். 8 முறை சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வைத்து 4 முறை எம்.எல்.ஏ.வாக்கி, எம்.பி., தேர்தலில் நிற்க வைத்தார். என்னை தலைவராக்கிய அடுத்த நாளில் இருந்து ஜிகே மணி சூழ்ச்சி செய்ய தொடங்கி விட்டார். ஜி.கே.மணியை அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும். இவர்கள் சமூகத்தில் ஒதுக்கப்பட வேண்டியவர்கள்" என கூறினார்.





















