"பாட்டாளி மக்கள் கட்சி சார்பில், சாதிவாரி கணக்கெடுப்பு வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்திற்கு தவெகவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது"

Continues below advertisement

பாட்டாளி மக்கள் கட்சி போராட்டம் - PMK Protest 

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக தமிழ்நாடு அரசு உடனடியாக சாதிவாதி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி, சென்னையில் டிசம்பர் 17ஆம் தேதி போராட்டம் நடத்த உள்ளது. இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக, திமுகவை தவிர்த்து பல்வேறு கட்சிகளுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நேரில் சென்று அழைப்பு கொடுக்கப்பட்டு வருகிறது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகளுக்கு, பாமக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

தமிழக வெற்றிக் கழகத்திற்கு அழைப்பு  - TVK

இதன் ஒரு பகுதியாக விஜய்யின் தமிழக வெற்றிக்கழகம் கட்சிக்கு, பாமக நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்ளுமாறு பாமக தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாமகவின் சமூக நீதிப் பேரவை தலைவர் பாலு மற்றும் பாமக நிர்வாகிகள் இன்று விஜயின் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு சென்று நேரில் அழைப்பு விடுத்தனர்.

Continues below advertisement

இது தொடர்பாக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா செய்தியாளர்களிடம் கூறுகையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பது நல்ல விசயம். ஒரு நல்ல விசயத்திற்காக கொடுக்கப்பட்ட பாமக சார்பில் கொடுக்கப்பட்ட கடிதத்தை தமிழக வெற்றிக்கழகம் பெற்றுக் கொண்டுள்ளது. நிச்சயம் கட்சித் தலைவரிடம் இது குறித்து ஆலோசித்து ஆர்பாட்டத்தில் கலந்து கொள்வது குறித்து தெரிவிக்கப்படும் என தெரிவித்தார். பாமக நடத்தும் போராட்டத்தில், தமிழக வெற்றி கழகம் கலந்து கொள்ளுமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.

பாமக முன்னெடுக்கும் போராட்டம் என்ன ?

இது குறித்து முன்னதாக அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த மாட்டோம் என்று பிடிவாதம் பிடிக்கும் திமுக அரசைக் கண்டித்தும், உடனடியாக சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தக் கோரியும் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் வரும் திசம்பர் 17&ஆம் தேதி புதன்கிழமை சென்னை எழும்பூர் இராசரத்தினம் திடல் அருகில் தொடர்முழக்கப் போராட்டம் நடத்தப்படவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கு வசதியாகவும், வன்னியர் உள் இட ஒதுக்கீட்டுக் கோரிக்கையை இன்னும் வலிமையாகவும், பிரமாண்டமாகவும் வலியுறுத்துவதற்கு வசதியாகவும் திசம்பர் 17&ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெறவிருந்த அரசு அலுவலகங்களை முற்றுகையிட்டு, சிறை நிரப்பும் போராட்டத்தை 2026&ஆம் ஆண்டு ஜனவரி 29&ஆம் தேதி வியாழக்கிழமை நடத்துவதற்கும் பாட்டாளி மக்கள் கட்சி முடிவு செய்திருக்கிறது.

சென்னையில் திசம்பர் 17&ஆம் தேதி நடைபெறவுள்ள தொடர்முழக்கப் போராட்டத்திற்கு நான் தலைமை ஏற்கிறேன். சமூகநீதியில் அக்கறை கொண்டு, சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி வரும் அரசியல் கட்சிகள், சமூக அமைப்புகள் ஆகியவற்றின் தலைவர்களும், நிர்வாகிகளும் இந்த போராட்டத்தில் பெருமளவில் பங்கேற்பார்கள். பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் அதன் சார்பு & இணை அமைப்புகளைச் சேர்ந்த அனைத்து நிலை நிர்வாகிகளும், பொதுமக்களும் சென்னையில் நடைபெறவுள்ள தொடர்முழக்கப் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வர் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்திருந்தார்.