Anbumani: “ஆணுறுப்பை வெட்டி விட்ருவேன்” - கொந்தளித்த அன்புமணி.. ”காணாமல் போன சட்ட ஒழுங்கு”
Anbumani: தமிழ்நாட்டில் குற்றவாளிகளுக்கு பயம் இல்லாமல் போய்விட்டதால் பாலியல் குற்றங்கள் அதிகரித்து இருப்பதாக, பாமக தலைவர் அன்புமணி பேசியுள்ளார்.

Anbumani: ஆட்சியில் இருந்தால் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவரின் ஆணுறுப்பை வெட்டி விடுவேன் என, அன்புமணி ஆவேசமாக பேசியுள்ளார்.
அன்புமணி பேச்சு:
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே ஆர்.கே.பேட்டையில் நடைபெற்ற பாமக நிர்வாகியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியாவிற்கே நாம் பல சாதனைகளை செய்திருக்கிறோம். வேறு எந்த கட்சியும் இதனை சொல்ல முடியாது தமிழ்நாட்டில் தற்போது ஆண்டு கொண்டிருக்கும் திமுகவோ அல்லது ஆண்டு முடித்த அதிமுகவோ இதனை சொல்ல முடியாது என குறிப்பிட்டு பாமக முன்னெடுத்த பல்வேறு போராட்டங்களை குறிப்பிட்டார்.
”தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கே இல்லை”
தொடர்ந்து பேசிய போது, “தமிழ்நாட்டில் சட்டமும் கிடையாது சட்ட ஒழுங்கும் கிடையாது. பெண்கள் எங்கும் பாதுகாப்பாக தனியாக செல்ல முடியாத சூழல் உள்ளது. பல பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தமிழகத்தில் நடக்கிறது. கொலை செய்யும் அளவிற்கு கோபத்தை தூண்டும் அளவிற்கு சிறுமிகளுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமைகள் நிகழ்கின்றன. இவை எல்லாம் எங்கோ பீகாரிலோ, சத்திஸ்கரிலோ அல்லது உத்தரபிரதேசத்திலேயோ நடைபெறவில்லை. நமது தமிழ்நாட்டில் தான் அரங்கேறுகின்றன.
புடிச்சு வெட்டி விட்ருவேன் - அன்புமணி
குற்றவாளிகளுக்கு பயம் இல்லை. நான் மட்டும் ஆட்சியில் இருந்தால், வேற மாதிரி செய்திருக்க முடியும். புடிச்சு வெட்டி விட்ருவேன். (ஆணுறுப்பை பிடித்து வெட்டி விட்ருவேன் என சைகையில் வெளிப்படுத்தினார்). அப்படி செய்தால் யாராவது அந்த தவறை செய்வானா? அய்யய்யோ வெட்டி விடுவார்கள் என பயத்தில் தவறு செய்யமாட்டார்கள். அந்த பயம் வேண்டும். ஆனால், அந்த பயம் தான் தற்போது இல்லை.
போதைப்பொருள் விற்பனை
தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை மாத்திரை, கஞ்சா மது விற்பனை நடைபெறுகிறது, இதற்கெல்லாம் காரணம் யார்? பாதுகாப்பு இல்லாமல் பெண்கள் எங்கும் செல்ல முடியவில்லை இதையெல்லாம் நீங்கள் அனைவரும் கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு யார் மாற்றத்தை கொண்டு வருவார்களோ அவர்களுக்கு நீங்கள் ஆதரவாளியுங்கள்” பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
ஆதரவும்..எதிர்ப்பும்..!
அன்புமணியின் பேச்சு தொடர்பான வீடியோக்களை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர். ஒருதரப்பினர் பாலியல் குற்றங்கள் குறிப்பாக குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு, அன்புமணி சொன்னதை போன்று கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர். அரபு நாடுகளில் பின்பற்றுவது போன்ற தண்டனைகளை நமது நாடுகளில் பின்பற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுகின்றனர். அதேநேரம், மற்றொரு தரப்பினர் அன்புமணி வன்முறையை தூண்டும் விதமாக பேசியுள்ளார் எனவும், ஒரு அரசியல் கட்சியின் தலைவர் என்பதை உணர்ந்து பொறுப்புடன் பேச வேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர்.