ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார். இதனை முன்னிட்டு அம்மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4,5 மாதங்களே உள்ள நிலையில் தேசிய அரசியலில் உள்ள தலைவர்களின் வருகை மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று ஒருநாள் பயணமாக கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு வருகை தருகிறார்.
இயற்கை வேளாண் மாநாடு
தமிழ்நாடு இயற்கை வேளாண் கூட்டமைப்பு சாப்பில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாடு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கொடிசியா வளாகத்தில் இன்று தொடங்கவுள்ள நிலையில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதனை முன்னிட்டு ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் இருந்து அவர் விமானம் மூலம் கோவை விமான நிலையம் வருகை தருகிறார். அங்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் அரசு அதிகாரிகள் வரவேற்பு அளிக்கவுள்ளனர்.
பிரமாண்ட வரவேற்பளிக்க ஏற்பாடு
அங்கிருந்து கார் மூலம் மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா மைதானம் செல்கிறார். அங்கு அவருக்கு தென்னிந்திய இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பின்னர் மாநாட்டை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் 9 கோடி விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் 21வது தவணையாக ரூ.18 ஆயிரம் கோடி உதவித் தொகையை அவர் வழங்கவுள்ளார். இந்த திட்டத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 21,80,204 பேரும், கோவையில் மட்டும் 44,837 பேரும் பயனடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இயற்கை விவசாயம் செய்து சாதனை படைத்த நபர்களுக்கு பிரதமர் மோடி விருது வழங்கி கௌரவிக்கிறார். பின்னர் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகள், அது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடும் விஞ்ஞானிகளுடன் அவர் கலந்துரையாடுகிறார். இதனையடுத்து அங்கு அமைக்கப்பட்டிருக்கும் இயற்கை விவசாயம் சார்ந்த உற்பத்தி பொருட்கள் கொண்ட அரங்குகளை அவர் பார்வையிடுகிறார்.
ஆவலுடன் காத்திருக்கும் பாஜக தொண்டர்கள்
இந்த நிகழ்வுகளை எல்லாம் முடித்து விட்டு மதியம் 3.30 மணியளவில் கோவை விமான நிலையம் திரும்பும் பிரதமர் மோடி அங்கிருந்து நேரடியாக டெல்லி செல்கிறார். இந்த இயற்கை வேளாண் மாநாட்டில் தென்னிந்தியாவைச் சேர்ந்த மாநிலங்களின் விவசாயிகள் கலந்து கொள்ள உள்ளனர். இதனால் மாநாடு நடைபெறும் இடம் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிள்ளது. கொடிசியா வளாகம் பிரதமரின் தனி பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது. கோவையின் முக்கிய பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரதமர் மோடி கொடிசியா மைதானம் முதல் விமானம் நிலையம் செல்லும் வழியில் அவருக்கு பிரமாண்ட வரவேற்பளிக்க பாஜக தொண்டர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.