பிரதமர் நரேந்திர மோடி வரும் வியாழக்கிழமை அதாவது மே மாதம் 30ஆம் தேதி அன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கன்னியாகுமரி வரும் பிரதமர் மோடி அன்று பிற்பகல் படகு மூலம் விவேகானந்தர் நினைவு பாறைக்கு சென்று தியான மண்டபத்தில் தியானம் செய்யவுள்ளார். மேலும், ஜூன் மாதம் 1ம் தேதி தியானத்தை முடித்துவிட்டு விவேகானந்தர் நினைவுப் பாறை விட்டு வெளியே வந்து, பின்னர் டெல்லி புறப்பட்டு செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது. 


நிகழ்ச்சி நிரல் 


பிரதமர் அலுவலகத்தில் இருந்து வெளியாகியுள்ள இதுதொடர்பான நிகழ்ச்சி நிரலில், 30ஆம் தேதி பிற்பகல் 3.55 மணிக்கு திருவனந்தபுரம் விமானநிலையத்திற்கு  தனி விமானத்தில் வரும் பிரதமர் அங்கிருந்து ஹெலிகாப்பிட்டரில் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு, அங்கு மாலை 4.35 மணிக்கு சென்றடைகின்றார். 


அதன் பின்னர் விவேகானந்தர் பாறைக்குச் செல்லும் பிரதமர் அங்கு மறுநாள் வரை தியானத்தில் ஈடுபடவுள்ளார். 31ஆம் தேதி முழுவதும் தியானத்தில் ஈடுபடுவதுடன் அந்த நாளை முழுவதும் அங்கேயே செலவிடுகின்றார். அதன் பின்னர் ஜீன் 1ஆம் தேதி பிற்பகல் 3.25 மணிக்கு புறப்பட்டு, மீண்டும் திருவனந்தபுரம் விமானநிலையம் சென்று, அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கின்றார். 




நாடு முழுவதும் தற்போது 18வது மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருவதால், பிரதமர் மோடியின் இந்த பயணம் முழுக்க முழுக்க தனிப்பட்ட பயணமாக அமையவுள்ளது. இதற்கு முன்னர் பிரதமர் மக்களவைத் தேர்தலுக்காக பிரச்சாரம் செய்ய தமிழ்நாட்டிற்கு வந்திருந்தார். அதன் பின்னர் பிரதமர் வரும் 30ஆம் தேதி வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


பிரதமர் மோடியின் சமீபத்திய பேட்டி 


காங்கிரஸின் ராகுல் காந்தி மற்றும் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பாகிஸ்தான் தலைவரிடமிருந்து வெளிப்படையான ஆதரவு உள்ளது என பிரதமர் நரேந்திர மோடி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குற்றம் சாட்டியுள்ளார். 


 பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் சமீபத்தில் தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் காந்தியின் வீடியோவைப் பகிர்ந்தது மட்டும் இல்லாமல் அவரைப் பாராட்டினார். அதேபோல் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கிடைத்தபோதும் சவுத்ரி ஃபவாத் ஹுசைன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துகளைத் தெரிவித்திருந்தார். 


அவர்களுக்கு ஏன் ஆதரவு?


இதனைச் சுட்டிக்காட்டிப் பேசிய பிரதமர் மோடி, “பாஜகவை எதிர்ப்பவர்களை மட்டும் எப்படி அவர்களுக்கு (பாகிஸ்தான் முன்னாள் அமைச்சருக்கு) பிடிக்கின்றது, அவர்களுக்கு மட்டும் எதனால் இந்த ஆதரவு கிடைக்கின்றது. இது கவலைக்குரிய விஷயமாக இருந்தாலும், இந்தியாவில் உள்ள வாக்காளர்கள் அரசியல் தெளிவுடைய வாக்காளர்கள். இவர்களிடையே வெளிநாடுகளில் இருப்பவரிகளின் அறிக்கைகள் எந்தவகையிலும் தாக்கத்தை ஏற்படுத்தாது. இந்தியாவில் நடத்தப்படும் தேர்தல் மட்டும் இல்லாமல் இந்தியாவின் ஜனநாயகமே மிகவும் முதிர்ச்சி அடைந்தது. இந்திய வாக்காளர்களும் அவ்வாறுதான். இவர்களை வெளிப்புற காரணங்கள் எந்தவகையிலும் பாதிக்காது” எனக் கூறினார்.