பிரதமர் வருகையையொட்டி ராமேஸ்வரம் தங்கும் விடுதிகள் மற்றும் வீடுகளில் மோப்பநாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருவதால் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி வரும் 20 மற்றும் 21ஆகிய இரு தினங்கள் ராமேஸ்வரத்திற்கு ஆன்மீக பயணமாக வர இருப்பதையடுத்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் வளாகத்தை சுற்றியுள்ள தனியார் தங்கும் விடுதிகளில் தங்கி உள்ள நபர்களின் விவரங்கள் மற்றும் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் முன்பதிவு செய்துள்ள வாடிக்கையாளர்களின் விவரங்கள் மற்றும் கோயிலை சுற்றி உள்ள வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் மோப்பநாய் உதவியுடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் மற்றும் மத்திய உளவுத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இதனால், வழக்கம்போல் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தில் ஆன்மீக கடன்களை நிறைவேற்ற வரும் வெளி மாநில மற்றும் வெளி மாவட்ட பயணிகள் பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக அங்கு தங்கும் விடுதிகளில் பலத்த சோதனை நடைபெற்று வருவதால், அவர்களை தங்க அனுமதிக்காமல் அதிகாரிகளின் தொல்லைகளுக்கு பயந்து தனியார் விடுதி நிறுவனத்தினர் கராற் காட்டுகின்றனர். இதனால், முன் பதிவு செய்தவர்களும் கூட அவதி அடைகின்றனர்.