PM Modi TN Visit LIVE: கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி நிறைவு!
PM Modi TN Visit LIVE Updates: கடந்த 2 மாதங்களில், ஆறாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இந்த முறை கோவையில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார்.
கோவை ஆர்.எஸ்.புரத்தில் வாகன பேரணியை நிறைவு செய்த பிரதமர் மோடி ரேஸ் கோர்ஸில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகைக்கு புறப்பட்டார்.
கோவையில் பிரதமர் மோடியின் வாகன பேரணி நிறைவுபெற்றது.
வாகன பேரணியின் இருபுறங்களில் உள்ள மக்கள், கையில் செல்போன் வைத்திருக்க கூடாது என காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாகன பேரணியில் பிரதமர் மோடியின் மாஸ்கை போட்டு கொண்டு முதியவர் ஒருவர் நடனமாடி வருகிறார்.
கோவை வாகன பேரணியில் மோடியின் பெயரை சொல்லி பாஜக தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.
கடந்த 1998ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் மரணம் அடைந்தவர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் வருகைதரும் சாலையோரங்களில் மத்தளம், நாதஸ்வரம் இசைக்கருவி மூலம் இசையும், வள்ளி கும்மியாட்டம் உள்ளிட்ட நடனங்களும் நடைபெறுகின்றன.
மாலை 6 மணிக்கு தொடங்கும் பேரணியானது, 7 மணிக்கு முடியும் என பாஜக தகவல் தெரிவித்துள்ளது.
பேரணியின்போது, பிரதமர் மோடி சுமார் 500 கி.மீ தூரம் சாலையில் நடந்து செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விமான நிலையத்திலிருந்து பிரதமர் மோடி சாய்பாபா காலனி நோக்கி, காரில் சாலை வழியாக செல்கிறார். பிரதமருக்கு, பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர்
கோவையில் பாஜக ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்க பிரதமர் மோடி வருகையை ஒட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாகனப் பேரணியானது பூ மார்க்கெட், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, டி.வி.சாமி சாலை வழியாக ஆர்.எஸ்.புரம் தலைமை அஞ்சல் நிலையம் அருகில் நிறைவடைகிறது. சுமார் 2.5 கி.மீ. தொலைவுக்கு வாகனப் பேரணி நடைபெறுகிறது.
கோவை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. சாலையின் இருபுறங்களிலும் பிரதமர் மோடியை வரவேற்க பொதுமக்கள் மற்றும் தொண்டர்கள் காத்திருக்கின்றனர்.
Background
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, அடுத்த மாதம் 19ஆம் தேதி, மக்களவை தேர்தல் தொடங்க உள்ளது. ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி தொடங்கும் மக்களவை தேர்தல், ஏழு கட்டங்களாக ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் கட்டத்திலேயே தமிழ்நாட்டுக்கு தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை தவிர்த்து 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டத்தில் நாடு முழுவதும் 102 மக்களவை தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. இருப்பினும், ஒட்டு மொத்த நாட்டின் கவனமும் தமிழ்நாட்டின் திரும்பியுள்ளது.
தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலமாக இருப்பதாலும் 39 மக்களவை உறுப்பினர்களை கொண்டிருப்பதாலும் தமிழ்நாட்டை கைப்பற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணியும் பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.
பலமாக இருக்கும் இந்தியா கூட்டணியை வீீழ்த்தி கணிசமான தொகுதிகளை கைப்பற்ற பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொண்டு பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார் பிரதமர் மோடி.
கடந்த 2 மாதங்களில், ஆறாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ள பிரதமர் மோடி, இந்த முறை கோவையில் வாகன பேரணியில் ஈடுபடுகிறார். இதற்காக, கர்நாடக மாநிலம் சிவமோகா விமான நிலையத்தில் இருந்து கோவை விமான நிலையத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு வருகிறார். மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க உள்ளனர்.
இதை தொடர்ந்து, பிரதமர் மோடி விமான நிலையத்தில் இருந்து குண்டு துளைக்காத கார் மூலம் அவினாசி சாலை, புரூக்பாண்ட் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் சாலையை அடைகிறார். பின்னர், வாகன பேரணி நடக்கும் சாய்பாபா காலனிக்கு செல்கிறார். பிரதமர் மோடி செல்லும் வழிகளில் சிறப்பான வரவேற்பு அளிக்க பாஜகவினர் திட்டமிட்டு வருகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -