செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று மாலை 5 மணியளவில் சென்னை வந்தார். அதன்பின்னர் மாலை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் அவர் பங்கேற்றார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி செஸ் கரை வேட்டி மற்றும் துண்டு அணிந்து வந்துள்ளார். விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடற்கரை கோயில் வெண்கல சிலையை நினைவு பரிசாக அளித்து வரவேற்றார். இதைத் தொடர்ந்து அவர் சென்னை ஆளுநர் மாளிகையில் தங்கியுள்ளார். 


இந்நிலையில் சென்னை ஆளுநர் மாளிகையில் பிரதமர் மோடி தமிழ்நாடு பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷணன் உள்ளிட்டோர் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல் மற்றும் 2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் தொடர்பான வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 


முன்னதாக இன்று செஸ் ஒலிம்பியாட் விழாவில் பேசிய பிரதமர் மோடி, “வணக்கம் தமிழ்நாடு.. சர்வதேச செஸ் விளையாட்டில் மிகவும் முக்கியமான தொடர் இந்தியாவிற்கு வந்துள்ளது. செஸ் விளையாட்டின் தாயகமான இந்தியாவிற்கு வந்துள்ளது. திருவள்ளுவர் விருந்தோம்பல்  தொடர்பாக ஒரு குறளை தெரிவித்துள்ளார். அதில் இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி வேளாண்மை செய்தற் பொருட்டு எனக் கூறியுள்ளார்.


 






தமிழ்நாட்டில் மிகவும் குறுகிய காலத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிற்கும் செஸ் விளையாட்டிற்கும் பந்தம் உள்ளது. அதன்காரணமாக இந்தியாவின் செஸ் பவர் ஹவுஸாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தமிழ்நாட்டில் பல்வேறு கிராண்ட் மாஸ்டர்கள் உருவாகியுள்ளனர். தமிழ்நாட்டு சிறப்பான கலாச்சாரம், சிறப்பான அறிஞர்கள் மற்றும் உலகத்தின் பழமையான மொழியை கொண்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண