விழுப்புரம் : பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை 3 மணி அளவில் மதுராந்தகம் வரவுள்ளதை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு மற்றும் தீவனூர் பகுதிகளில் கனரக வாகனங்களை போலீசார் மாற்றுப் பாதையில் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Continues below advertisement

பிரதமர் வருகையும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காகவும், போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் (GST Road) போக்குவரத்து மாற்றங்களை மாவட்ட காவல் துறை அறிவித்துள்ளது.

இன்று மாலை 3 மணி அளவில் பிரதமர் நரேந்திர மோடி மதுராந்தகம் வரவுள்ளார். பொதுக்கூட்டம் சென்னை - திண்டிவனம் ஜி.எஸ்.டி தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய பகுதியில் நடைபெறுவதால், இன்று காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை கனரக வாகனங்கள் ஜி.எஸ்.டி சாலையில் செல்ல தடை விதிக்கப்பட்டு, மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்படுகின்றன.

Continues below advertisement

சென்னையிலிருந்து திண்டிவனம் நோக்கிச் செல்லும் வாகனங்கள்

சென்னையிலிருந்து திருச்சி மற்றும் திண்டிவனம் நோக்கிச் செல்லும் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை பின்வரும் பாதைகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது:

கிழக்கு கடற்கரை சாலை வழியாக: வண்டலூர், கேளம்பாக்கம், மாமல்லபுரம் வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையை அடைந்து, மரக்காணம் வழியாக திண்டிவனம் சென்று ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.

காஞ்சிபுரம் - வந்தவாசி வழியாக: வண்டலூர், படப்பை, ஒரகடம், வாலாஜாபாத் மற்றும் காஞ்சிபுரம் வழியாக வந்தவாசி - தெள்ளார் - வெள்ளிமேடு பேட்டை - தீவனூர் - கூட்டேரிப்பட்டு சந்திப்பு சாலை வழியாக ஜி.எஸ்.டி சாலையை அடையலாம்.

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கிச் செல்லும் வாகனங்கள்

விழுப்புரத்திலிருந்து சென்னை நோக்கி வரும் அரசுப் பேருந்துகள் மற்றும் இலகுரக வாகனங்களுக்கு காலை 11 மணி முதல் மாலை 7 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது:

ஈ.சி.ஆர் சாலை வழியாக: திண்டிவனம் - புதுச்சேரி சாலை வழியாக மரக்காணம் சென்று, அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை (ECR) வழியாக மாமல்லபுரம் கடந்து சென்னை செல்லலாம்.

உள்நாட்டு சாலைகள் வழியாக: திண்டிவனம் கல்லூரி சாலை வழியாக வெள்ளிமேடு பேட்டை, தெள்ளார், வந்தவாசி, காஞ்சிபுரம், வாலாஜாபாத், வண்டலூர் வழியாக சென்னை அடையலாம்.

ஸ்ரீபெரும்புதூர் வழியாக: திண்டிவனம் - வந்தவாசி - காஞ்சிபுரம் (செவிலிமேடு பாலாறு சந்திப்பு) வழியாக கீழம்பி புறவழிச்சாலையை அடைந்து, ஸ்ரீபெரும்புதூர் வழியாக சென்னை செல்லலாம்.

களத்தில் போலீசாரின் தீவிர கண்காணிப்பு

தற்போது திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டு மற்றும் தீவனூர் ஆகிய இடங்களில் போலீசார் முகாமிட்டு, வாகனங்களை மாற்றுப் பாதையில் திருப்பிவிடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, கும்பகோணம் மற்றும் திருச்சி மார்க்கமாக வரும் வாகனங்கள் கூட்டேரிப்பட்டு பகுதியில் இருந்து வந்தவாசி நோக்கி திருப்பி விடப்படுகின்றன. புதுவை மார்க்கமாக வரும் வாகனங்கள் ஈ.சி.ஆர் வழியாகச் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.

மதுராந்தகம் வரை செல்லும் அத்தியாவசியத் தேவைக்கான வாகனங்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலையில் அனுமதிக்கப்படுகின்றன. பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பாக, அதாவது மதியத்திற்கு மேல், அரசுப் பேருந்துகள் உட்பட அனைத்து வாகனங்களும் முழுமையாக மாற்றுப் பாதையில் திருப்பி விடப்படும் என காவல்துறை திட்டமிட்டுள்ளது. இந்தத் திடீர் போக்குவரத்து மாற்றத்தால் ஜி.எஸ்.டி சாலையில் பயணம் செய்வோர் மாற்றுப் பாதைகளை அறிந்து அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிடுமாறு செங்கல்பட்டு மாவட்டக் காவல் துறை கேட்டுக்கொண்டுள்ளது.