சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தந்தை பெரியாரின் பிறந்தநாள் சமூகநீதி நாளாகக் கொண்டாடப்படுமென்று அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. பெரியார் நடத்திய போராட்டங்கள் யாராலும் காப்பியடிக்க முடியாத போராட்டங்கள்; அவர் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள்; அவர் பேசிய பேச்சுகள் யாரும் பேச பயப்படும் பேச்சுகள்; அவர் நடந்த நடை யாரும் நடந்திடாதவை; அவர் செய்த பயணங்கள் யாரும் செய்திடாதவை என்று இந்த அறிவிப்பின்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.
ஆமாம். பெரியார் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள் தான். ஆமாம். பெரியார் பேசியது யாரும் பேச முடியாதவைதான். தமிழை காட்டு மிராண்டி மொழி என்றார். தமிழ் முட்டா பசங்க பேசும் பாஷை என்றார். தமிழை காட்டுமிராண்டி மொழி, முட்டா பசங்க பாஷை என்று ஏன் சொன்னார். அவரே விளக்குகிறார்.
இத்தனை காலமும் தமிழ் தோன்றிய 3000, 4000 ஆண்டுகாலமாக இந்த நாட்டில் வாழ்ந்த தமிழினாலும் தமிழ் படித்த புலவனாலும் தமிழ் நாட்டிற்கு, தமிழர் சமுதாயத்திற்கு என்ன நன்மை என்ன முற்போக்கு உண்டாக்கப்பட்டிருக்கிறது? இலக்கியங்களிலே, சரித்திரங்களிலே காணப்படும் எந்தப் புலவனால், எந்த வித்துவானால், எவன் உண்டாக்கிய இலக்கியங்களினால், இதுவரை தமிழனுக்கு ஏற்படுத்தப்பட்ட, ஏற்படுத்திய நன்மை என்ன என்று கேட்கிறேன்.
என் மொழி அறிவை வளர்க்கிறதா? அறிவியல் சிந்தனையை ஊக்கப்படுத்துகிறதா? பரந்த மனத்தோடு உலகம் எங்கிலும் இருந்து வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்கிறதா? பதிலுக்கு எல்லோருக்கும் தன் கதவுகளைத் திறந்துவிடுகிறதா? வேறுபாடின்றி எல்லோரையும் அணைத்துக்கொள்கிறதா என்றெல்லாம் கவனமாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். இல்லை என்று தெரிந்தால் அந்தக் கணமே என் மொழிப்பற்றை உதறிவிடுவேன். இதில் மேலோட்டமாகப் பார்த்தால் வன்மம் இருப்பது போன்று தோன்றினாலும், அப்படிச் சொன்னதற்கான காரணத்தை கவனித்தால் அவரது கோபம் புரியும். மனிதகுலத்திற்கு எந்த மொழி அறிவை ஊட்டுகிறதோ அந்த மொழி தான் அனைவருக்குமான மொழி என்பது தான் பெரியாரின் சிந்தனை. தமிழை காட்டுமிராண்டி மொழி என்று கூறிய அவரேதான் தமிழ் எழுத்து சீர்திருத்தத்தையும் செய்தார்.
அவர் செய்த போராட்டங்கள் யாராலும் காப்பியடிக்க முடியாத போராட்டங்களா. ஆமாம் காப்பியடிக்க முடியாதவை தான். உதாரணத்திற்கு பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம். ஏன் சிலையை உடைத்தார் பெரியார். அவரே சொல்லுகிறார். இந்தக் கணபதி முதல் கிருஷ்ணன் வரை உள்ள சாமிகள் என்பவை நமது கடவுள்கள் அல்ல; நமது அடிமைத்தனத்தையும் காட்டுமிராண்டித்தனத்தையும் காட்டும் சின்னம் ஆகும். இதை நாம் உணர்ந்து விட்டோம் என்பதற்கு அறிகுறியாக அச்சின்னத்தை உடையுங்கள்.
உடைப்பதற்கு முதல் கடவுளாக எல்லோரும் எதுவும் செய்வதற்கு முதலாக பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிப்பார்களே, அந்தப் பிள்ளையாரையே தேர்ந்தெடுக்கிறேன். சிலைகளை உடைக்கிறேன் என்றவுடன், கோயிலுக்குள் போய் புகுந்து உடைப்போம் என்று யாரும் கருதவேண்டாம். இந்தப்படி கோயிலுக்குள்ளே புகுந்து கலாட்டா செய்வோம் என்று யாரும் அஞ்ச வேண்டியதில்லை. கோயிலுக்குள் ஒருவரும் போக மாட்டோம். குயவரிடத்தில் மண் கொண்டு இன்றைய கோயிலில் இருக்கிற சாமியைப் போல செய்து தரச்சொல்லி, அல்லது கடைகளிலே விற்கிறதே வர்ணம் அடித்த பொம்மைகள் அதை வாங்கிக் கொண்டு வந்து, ஒரு தேதியில் இப்படி இதை உடைக்கப் போகிறோம் என்பதாக எல்லோருக்கும் தெரிவித்து விட்டு கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு நடுரோட்டிலே போட்டு உடைப்போமே தவிர, கோயிலில் புகுந்து விக்ரத்தை பெயர்த்துக் கொண்டு வரும் வேலையையோ, அல்லது அவைகளுக்குச் சேதம் ஏற்படுகிற மாதிரியோ யாரும் நடந்துக் கொள்ள மாட்டார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன் என்றார்.
இது போன்ற ஒரு போராட்டத்தை நடத்த பெரியாரைத் தவிர வேறு எந்த ஒரு தலைவருக்கும் தைரியம் இருக்கவில்லை. திகவிலிருந்து பிரிந்த அண்ணாவே 'நான் பிள்ளையாரையும் உடைக்கமாட்டேன் அதற்குத் தேங்காயும் உடைக்கமாட்டேன்' என்றுதான் கூறினார். ஆனால், பெரியார் நடத்திய பிள்ளையார் சிலை உடைப்புப் போராட்டம் இப்போது வரை வரலாற்றில் நிற்கிறது.
பெரியார் எழுதிய எழுத்துகள் யாரும் எழுதத் தயங்கும் எழுத்துகள். ஆமாம். அவரது எழுத்துகளை அவரைத் தவிர தைரியமாக எழுத முடியாது தான். அவருக்கு மதம், மொழி, தேசியம் எல்லாவற்றையும் விட மனிதம் மட்டுமே முக்கியமாக இருந்தது. அதற்காக அவர் எதையும் இழக்கவும் தயாராகவும் இருந்தார்; ஏற்கவும் தயாராக இருந்தார். பெரியார் சொல்கிறார், மாட்டிறைச்சி சாப்பிடும் பிரிட்டிசார் தான் உலகம் முழுதும் ஆள்கிறார்கள்; ஆனால் இங்கோ அப்படிச் சாப்பிடுபவனை ஒதுக்கி ஊருக்கு வெளியில் வைத்து இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நாடு பூகம்பம், புயலால் அடியோடு அழியட்டுமே. அப்படி நடந்தால் என்ன நட்டமாகிவிடும்.
சாதிபேதம் ஒழிவதாலும், மேல்சாதி கீழ் சாதி ஒழிவதாலும், ஒழிய வேண்டும் என்று கேட்பதாலும் ஒரு தேசியம் கெட்டுப்போகுமானால் சுயராஜ்ஜியம் வருவது தடைபட்டுப் போனால் அப்படிப்பட்ட தேசியமும் சுயராச்சியமும் ஒழிந்து நாசமாய் போவதே மேல் என்கிறார் பெரியார். அதுமட்டுமில்லை. எல்லா மதக்காரர்களுக்கும் எல்லாவிதமான பாவங்களும் பாவ மன்னிப்பு, பாவ விலக்குபெற மதங்களில் ஆதாரங்கள் மார்க்கங்கள் உள்ளன. இதனால் ஹான் மனிதரில் எவனும் யோக்கியமாக இருக்க வேண்டிய அவசியமும் இல்லாமல் போய்விட்டது. மனிதன் என்றால் எவனும் அயோக்கியமாய் இருக்க வேண்டியவனாகவே ஆகிவிட்டான். எனவே மதங்கள் ஒழிந்தால் ஒழிய எவனும் யோக்கியனாக இருக்க முடியாது என்கிறார்.
பெரியாரின் கருத்துகளை மேலோட்டமாகப் படிப்பவர்களுக்கு நிச்சயம் கோபம் வரும். ஏனெனில், பல ஆண்டுகளாக கட்டமைக்கப்பட்ட அறிவுக்கொவ்வாத, மனிதத்தை மதிக்காத நம்பிக்கைகளை சம்மட்டியால் அடித்து உடைத்திருக்கிறார். பெரியாரைத் தவிர வேறு யாரும் இவ்வளவு மூர்க்கமாக தங்கள் கருத்துகளை வெளிப்படுத்தியதில்லை. அதனால் தான் அவரை ஈரோட்டு இடி முழக்கம் என்றார்கள்.
இதெல்லாம் சொல்ல பெரியார் யார் என்ற கேள்வி உங்களுக்கு எழலாம். யார் பெரியார்? இதோ அவரே சொல்கிறார். ஈ.வே.ராமசாமி என்கிற நான், திராவிட சமுதாயத்தைத் திருத்தி உலகில் உள்ள மற்ற சமுதாயத்தினரைப் போல மானமும், அறிவும் உள்ள சமுதாயமாக ஆக்கும் தொண்டை என் மேல் போட்டுக்கொண்டு அதே பணியாய் இருப்பவன். இதைச் செய்ய எனக்கு யோக்யதை இருக்கிறதோ இல்லையோ, இந்த நாட்டில் அந்த பணியை யாரும் செய்ய வராததனால், அதை மேல்போட்டுக்கொண்டு தொண்டாற்றி வருகிறேன். இதைத்தவிர வேறு எந்த பற்று ஒன்றும் எனக்கு இல்லாததால், பகுத்தறிவையே அடிப்படையாகக்கொண்டு கொள்கைகளையும், திட்டங்களையும் வகுப்பதாலும் நான் அத்தொண்டிற்கு தகுதி உடையவன் எனக்கருதுகின்றேன். சமுதாயத்தொண்டு செய்பவனுக்கு இதுபோதும் என்றே கருதுகிறேன். இதைவிட அவரை வேறு யாராலும் தெளிவாக சொல்லிவிட முடியாது.
தமிழ்நாட்டை பெரியார் மண், பெரியார்மண் என்று கூறுகிறார்களே, பெரியார் மண் எங்க இருக்கு காட்டு என்கிறார்கள். உங்கள் பெயரின் அருகில் உங்கள் சாதியை போட்டுக்கொள்ளாதவரை, இந்தி திணிப்பை இந்த மாநிலம் எதிர்த்துக் கொண்டிருக்கும் வரை, உன் சாதி என்ன என்று பிறரிடம் வெளிப்படையாக கேட்க முடியாதவரை, சாதியைச் சொல்லி ஒருவனை அடிமைப்படுத்த முடியாத வரை இந்த மண் பெரியார் மண் தான்.