கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழப்பு தொடர்பாக பெரவள்ளூர் காவல்துறையினர் இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மருத்துவ கவுன்சில் கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மேலும், உயிரிழந்த பிரியாவை அறுவை சிகிச்சை செய்த 2 மருத்துவர்களின் கவனக்குறைவால் மரணமடைந்ததால் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மா சுப்ரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். 


மருத்துவத்துறை விளக்கம்:


கால் அகற்றப்பட்டு சிகிச்சை பெற்ற கால்பந்து வீராங்கனை பிரியா உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவத்துறை விளக்கமளித்தது. அதில், “முதலில் தசை கிழிந்து திரவ வடிவிலான மையோகுளோனஸ் என்ற திரவம் வெளியேற துவங்கியது. திரவம் வெளியேற முடியாமல் ரத்தத்தில் கலந்ததால் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, சிறுநீரகம் செயலிந்தது. இதையடுத்து ரத்த ஓட்டம் சீராக இல்லாமல் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்த நிலையில் பிரியா உயிரிழந்தார் என தெரிவித்தனர். 


யார் இந்த பிரியா..? கால் அகற்றப்பட்டது ஏன்..?


சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் 17 வயதான பிரியா.ஏழையான சூழ்நிலையில் வளர்ந்த இவர். சென்னை ராணிமேரி கல்லூரியில் முதலாமாண்டு பட்டப்படிப்பு படித்து வருகிறார். கால்பந்து போட்டிகளில் ஆர்வம் அதிகம் கொண்ட பிரியா, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். 


இந்தநிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மூட்டு வலி காரணமாக கொளத்தூர் பெரியார் நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று பெரிய பரிசோதனை மேற்கொண்டார். அப்போது அவரை பரிசோதித்த அரசு மருத்துவர்கள் பிரியாவின் வலது கால் மூட்டு பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாக தெரிவித்து அறுவை சிகிச்சை செய்துள்ளனர். அறுவை சிகிச்சைக்கு பிறகு பிரியாவின் காலில் வீக்கம் ஏற்பட்டு, உணர்ச்சியற்றாக இருந்துள்ளது. இதனால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உயர்சிகிச்சைக்காக பிரியா அனுமதிக்கப்பட்டார். 


தொடர்ந்து, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் பிரியாவின் காலில் ரத்த ஓட்டம் தடைபட்டிருப்பதை கண்டு, உயிருக்கு ஆபத்து ஏற்படுவதை தவிர்ப்பதற்காக உடனடியாக அறுவை சிகிச்சை செய்து வலது கால் அகற்றியுள்ளனர். 


மேலும், கால்பந்து வீராங்கனை பிரியாவின் கால் அகற்றப்பட முக்கிய காரணமாக இருந்த எலும்பியல் துறையைச் சேர்ந்த 2 மருத்துவர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உத்தரவிட்டார். 


இந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் கால் அகற்றப்பட்ட சிகிச்சை பெற்றுவந்த பிரியாவின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு இன்று காலை உயிரிழந்தார்.