தமிழகத்தில் மேலும் இரண்டு மாநகராட்சிகள் உருவாக்கப்பட உள்ளன என அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகத்துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் கே.என்.நேரு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் தமிழகத்தில் மேலும் 2 மாநகராட்சிகள் உருவாக்கப்படுகின்றன என தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் சட்டப்பேரவையில் பேசுகையில், “தமிழகத்தில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு மேலும் இரண்டு மாநகராட்சிகள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.
அதன்படி பெரம்பலூர், ராமநாதபுரம் ஆகிய நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்படுகின்றன. மேலும் நகராட்சிகளின் எண்ணிக்கையும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
மேலும் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்புகள் சில:
மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் ரூ.27.20 கோடியில் 50 புதிய பூங்காக்கள் அமைக்கப்படும்.
சென்னை மாநகராட்சி பூங்காக்கள், பொது இடங்களில் ரூ.52 கோடியில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு உருவாக்கப்படும்.
மெரினா கடற்கரை ரூ. 6 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
கும்பகோணம், அம்பாசமுத்திரம் உள்ளிட்ட இடங்களில் புதிய பேருந்து நிலையங்கள் கட்டப்படும்.
சென்னை மாநகராட்சியில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் மேலும் 30 பூங்காக்கள் அமைக்கப்படும்.
நாமக்கல், திருவண்ணாமலை, புதுக்கோட்டை மாநகராட்சிகளில் ரூ.48 கோடியில் புதிய மண்டல அலுவலகங்கள் கட்டப்படும்.
பழுதடைந்துள்ள பள்ளிக் கட்டடங்கள் ரூ.52.26 கோடியில் சீரமைக்கப்படும்.
தாம்பரம், விருதுநகரில் விடுபட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை அமைக்க முதற்கட்டமாக ரூ.800 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.