(Source: ECI | ABP NEWS)
Chennai Traffic: சென்னை திரும்பும் மக்கள் ! தாம்பரத்தில் ஸ்தம்பிக்கும் போக்குவரத்து! GST சாலையில் என்ன நடக்கிறது?
"ஒரே நேரத்தில் பொதுமக்கள் சென்னையை நோக்கி படையெடுப்பதால், சென்னை புறநகர் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது"

தொடர் விடுமுறை முடிந்து பள்ளிகள் இன்று திறக்கப்பட உள்ள நிலையில், சொந்த ஊர்களுக்குச் சென்ற மக்கள் அனைவரும் ஒரே நேரத்தில், சென்னைக்குத் திரும்புவதால் பெருங்களத்தூர் முதல் தாம்பரம் வரை கடும் போக்குவரத்து மற்றும் மக்கள் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
ஜி.எஸ்.டி. சாலையில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன
தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் ஆம்னி பேருந்துகள் மற்றும் சொந்த வாகனங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளதால், பெருங்களத்தூர் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது. வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து ஊர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நெரிசலைக் கட்டுப்படுத்தி போக்குவரத்தைச் சீர்செய்யும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், சிங்கப்பெருமாள் கோயில், மறைமலைநகர், பொத்தேரி மற்றும் கூடுவாஞ்சேரி ஆகிய பகுதிகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வாகனங்கள் ஒரே நேரத்தில், சென்னை நோக்கி படையெடுப்பதால் இந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தாம்பரம் ரயில் மற்றும் பேருந்து நிலையத்தில் அலைமோதும் கூட்டம்
சாலைப் போக்குவரத்து நெரிசல் ஒருபுறம் இருக்க, தாம்பரம் ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையமும் மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிகின்றன. ரயில் மூலம் சென்னை திரும்பிய ஆயிரக்கணக்கான மக்கள் தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து கடலலை போல் வெளியேறி வருகின்றனர்.
அதேபோல், தங்கள் வீடுகளுக்குச் செல்ல மாநகரப் பேருந்துகளுக்காகக் காத்திருக்கும் பயணிகளால் தாம்பரம் பேருந்து நிலையம் கூட்டத்தால் அலைமோதுகிறது. நீண்ட நேரம் காத்திருக்கும் பயணிகள், கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதேபோன்று சென்னை புறநகர் பகுதியில் பல்வேறு இடங்களில், நகர பேருந்துகளும் கூட்ட நெரிசல்களுடன் காணப்படுகின்றன.
செங்கல்பட்டில் நிலை என்ன ?
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செங்கல்பட்டு சுங்கச்சாவடியில், போக்குவரத்து நெரிசல் குறைவாக இருந்தாலும், தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றன. அவ்வப்போது செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. நள்ளிரவில் இருந்து தொடர்ந்து பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்னையை நோக்கி படையெடுத்து வருகின்றன.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் நிலை என்ன ?
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலும், மக்கள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதேபோன்று கிளாம்பாக்கம் அருகே உள்ள வண்டலூர் பைபாஸ் சாலையிலும், பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வண்டலூர் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.





















