தமிழக வெற்றிக் கழகம் அரசு தமிழ்நாட்டில் அமைந்துள்ள நிலையில், அக்கட்சி தொண்டர்கள் சிலர் அத்துமீறி நடந்து கொள்வது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வென்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அக்கட்சி தலைவர் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதுவரை 9 அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். இன்று தமிழக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதனால் 15 பேர் வரை புதிய அமைச்சரவையில் இடம்பெறுவார்கள் என சொல்லப்படுகிறது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு 2 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் விரைவில் அமைச்சரவையில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துமீறும் தவெக தொண்டர்கள்
இந்த நிலையில் பொதுவாக தமிழ்நாட்டில் ஒரு கட்சி ஆட்சிக்கு வருகிறது என்றால் அக்கட்சியைச் சேர்ந்த தொண்டர்கள் தங்களது செல்வாக்கை காட்டும் வகையில் சில செயல்களில் ஈடுபடுவார்கள். இது கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டை ஆண்ட திமுக, அதிமுக கட்சியில் நாம் கண்கூடாக பார்த்திருக்கலாம். அதனை கட்சி தலைமை கண்டித்து நடவடிக்கையும் எடுத்திருக்கலாம். இப்படியான நிலையில் புதிதாக அமைந்துள்ள தவெக ஆட்சி அப்படியிருக்காது என பொதுமக்கள் நம்பியிருக்கும் நிலையில் சிலர் செய்யும் செயல்களால் கட்சிக்கு அவப்பெயர் உண்டாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக அரசு அலுவலகங்கள் மற்றும் மருத்துவமனைகளில் ஆய்வு என்ற பெயரில் தவெகவினர் அத்துமீறி வருவதாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. ஓரிடத்தில் பிரச்னை என்றால் சம்பந்தப்பட்ட மாவட்ட எம்.எல்.ஏ., அமைச்சர்கள், கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மேயர், ஆட்சியர், அரசு அதிகாரிகள் என ஆய்வு மேற்கொள்ள இத்தனை பேர் உள்ளனர். ஆனால் நியாயம் கேட்கவோ, ஒரு பிரச்னைக்கு விளக்கம் கேட்கவோ பொதுமக்களாகிய நாம் செல்வதில் எந்தவித பிரச்னையுமில்லை. ஆனால் செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறி நடப்பது, அதிகாரத்தை காட்டுவது தவறு என அரசியல் வட்டாரத்தினர் தெரிவிக்கின்றனர்.
ஆர்வ மிகுதியில் சிலர் செய்யும் தவறுகள் முதலமைச்சர் விஜயை தான் பாதிக்கும் என்பதை சிந்திக்க வேண்டும். மேலும் ஒவ்வொரு விஷயத்திலும் ஏதாவது முன்னேற்றம் இருக்கிறதா என தொடர் கண்காணிப்பில் கட்சியினர் இருப்பது நல்ல விஷயம் தான். அதனை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என அட்வைஸ் செய்துள்ளனர்.
தென்காசி மாவட்டத்தில் அரசு மருத்துவமனையில் தவெக மருத்துவரணி என்ற பெயரில் சிலர் ஆய்வு செய்ததும், கன்னியாகுமரியில் பேரூராட்சி அலுவலகத்தில் சென்று தவெகவினர் அத்துமீறி ஆவணங்களை எடுத்ததாகவும் காவல் நிலையம் வரை புகார் சென்றுள்ளது. இதுபோன்ற செயல்களை வரும் காலங்களில் தவெகவினர் தவிர்க்க வேண்டும். விஜயின் ஆட்சிக்கு நற்பெயர் ஏற்படுத்த வேண்டும் என பலரும் சமூக வலைத்தளங்களில் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆட்சிக்கு வந்து ஒரு வாரம் மட்டுமே நிறைவடைந்த நிலையில் தொண்டர்களின் அடாவடிக்கு முதலமைச்சர் விஜய் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
