சென்னை மெரினா கடற்கரையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு நினைவுச்சின்னம் அமைப்பதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசு பதில் அளித்துள்ளது. 


81 கோடியில் பேனா சின்னம்:


மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் இலக்கிய பணியை போற்றும் வகையில், அவரின் நினைவிடத்திற்கு அருகே, கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது. பேனாவை, ரூபாய் 81 கோடி செலவில், 42 மீட்டர் உயரத்தில் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் பேனா சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு கடலோர மண்டல ஆணையம், அனுமதி அளித்த நிலையில் மத்திய அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 


இதுதொடர்பாக சமீபத்தில் மக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதனிடையே திருச்செந்தூரைச் சேர்ந்த பி.ராம்குமார் ஆதித்தன் என்பவர் தென்மண்டல அமர்வில் கடந்த டிசம்பர் மாதம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கடல் பகுதியை சூழலியல் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாக அறிவிக்க வேண்டும். அந்தப் பகுதிகளில் மறைந்த தலைவர்களின் உடல்களைப் புதைக்க தடை விதிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். 


மாநகராட்சி அனுமதி:


இந்த வழக்கில் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சென்னை மெரினா காமராஜர் சாலையில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா மற்றும் எம்ஜிஆர் நினைவிடங்கள், சென்னை சிட்டி முனிசிபல் சட்டம் 1919 பிரிவு 319(3) படி அறிவிக்கப்பட்ட இடுகாடு என்று தெரிவித்துள்ளது. 


ஏற்கனவே இருந்த நினைவிடத்தை தவிர கூடுதலான இடங்கள் நினைவிடமாக அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.  மேலும், முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் உடல் ஏற்கனவே உள்ள நினைவிட வளாகத்திற்குள்ளேயே புதைக்கப்பட்டுள்ளது. இதனை சென்னை மாநகராட்சி அனுமதிக்க  வேண்டும் என தமிழ் வளர்ச்சி துறை கேட்டுக்கொண்ட விண்ணப்பத்தின் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8 ஆம் தேதி சென்னை மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது எனவும் பதில் மனுவில் தெரிவித்துள்ளது.


அனைத்து துறைகளின் அனுமதி:


இதற்கிடையில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் பதிலளித்துள்ள பொதுப்பணித்துறை அனைத்து துறைகளின் அனுமதி பெற்ற பிறகே கடலில் பேனா சின்னம் அமைக்கப்படும் என உறுதியளித்துள்ளது. மேலும் அனுமதி பெறுவதற்கு மத்திய, மாநில அரசுகளிடம் விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.