மதுரையில் பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டு 4 பேர் உயிரிழந்த நிலையில், அந்த விபத்து ஏற்பட்டது எப்படி என ரயில்வே நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
ரயில்வே நிர்வாகம் விளக்கம்:
இதுதொடர்பாக ரயில்வே நிர்வாகம் அளித்துள்ள அறிக்கையில் “26.8.23 அன்று காலை 5.15 மணி அளவில் மதுரை யார்டில் உள்ள தனியார் பார்ட்டி கோச்/தனி நபர் கோச்சில் தீ விபத்து ஏற்பட்டதாக நிலைய அதிகாரி தெரிவித்தார். உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட, அவர்கள் 5.45 மணிக்கு சம்பவ இடத்திற்கு வந்தடைந்தனர். 7.15 மணிக்கு தீ முற்றிலுமாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. மற்ற பெட்டிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
தனியாரால் வாடகைக்கு எடுக்கப்பட்ட இந்த பெட்டிகள் ரயில் எண். 16730 கொண்ட மதுரை விரைவு ரயிலில் (புனலூர் _ மதுரை எக்ஸ்பிரஸ்) நேற்று மாலை நாகர்கோவில் சந்திப்பில் இணைக்கப்பட்டது. தொடர்ந்து 3.47 மணிக்கு மதுரை வந்தடைந்ததும் அந்த பெட்டி தனியாக பிரிக்கப்பட்டு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டது.
அப்போது அந்த பெட்டியில் இருந்த பயணிகள், சட்ட விரோதமாக எரிவாயு சிலிண்டரை பயன்படுத்தியதால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீயைக் கண்டு பல பயணிகள் பெட்டியிலிருந்து இறங்கினர். முன்னதாக சில பயணிகள் நடைமேடையிலேயே கீழே இறங்கி இருந்தனர். ஆகஸ்ட் 17ஆம் தேதி லக்னோவில் இருந்து இந்த ரயில் தனது பயணத்தை தொடங்கியது. சென்னை எழும்பூர் அனந்தபுரி விரைவு ரயில் மூலம் நாளை அவர்கள் சென்னை திரும்ப திட்டமிட்டு இருந்தனர். அங்கிருந்து லக்னோ திரும்பவும் முடிவு செய்திருந்தனர்.
ஐஆர்சிடிசி போர்ட்டலைப் பயன்படுத்தி எந்தவொரு தனிநபரும் ரயிலில் பார்ட்டி கோச்சை முன்பதிவு செய்யலாம். கேஸ் சிலிண்டர் போன்ற எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த பெட்டியை போக்குவரத்து சேவைக்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடந்தது என்ன?
உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த ஒரு குழுவினர் பார்ட்டி கோச் என்ற ரயில்வே திட்டத்தின் அடிப்படையில், ஒரு பெட்டி முழுவதையும் முன்பதிவு செய்து ஆன்மீக சுற்றுலாவை தொடங்கியுள்ளனர். கடந்த 17ம் தேதி இவர்களின் பயணம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நாகர்கோவிலில் இருந்து சென்னை வரும் திட்டத்தின் ஒரு பகுதியாக 90 பேர் கொண்ட அந்த குழு மதுரை வந்தடைந்துள்ளது. அங்கு ஸ்டேப்லிங் லைனில் நிறுத்தப்பட்டு இருந்த அந்த பெட்டியில் இருந்தவர்கள், வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் எரிவாயு சிலிண்டரை சட்டவிரோதமாக பயன்படுத்தியுள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக தீப்பற்றியதோடு, அதிவேகமாக பெட்டி முழுவதும் தீ பரவியுள்ளது. இதைகண்ட உள்ளே இருந்த பயணிகள் அலறி அடித்துக்கொண்டு பெட்டியில் இருந்து கீழே குதித்து ஓடியுள்ளனர். இதனிடையே பெட்டி முழுவதும் திப்பற்றி எரிந்து நாசமானது. தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். விபத்தில் தற்போது வரை 9 பேர் உயிரிழந்துள்ளனர்.