தஞ்சாவூர்: குழந்தைகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை சார்பில் பல்வேறு அவசர உதவி எண்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அறிவிக்கப்பட்டுள்ளன. 

Continues below advertisement

குறிப்பாக பெற்றோர்கள், பெண்கள் மற்றும் பொதுமக்கள் இந்த எண்களை தங்களது செல்பேசியில் சேமித்து வைத்துக் கொண்டு அவசர காலங்களில் பயன்படுத்துமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள், இணையவழி மோசடிகள் மற்றும் சாலை விபத்துகள் போன்ற சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், உடனடி உதவியைப் பெறுவதற்காக இந்த உதவி எண்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

பெற்றோர்கள் தங்களது குழந்தைகளுக்கு இந்த உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும், அவசர சூழ்நிலை ஏற்பட்டால் அச்சமின்றி சம்பந்தப்பட்ட உதவி எண்ணை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

தமிழ்நாடு அரசின் முக்கிய அவசர உதவி எண்கள்:

📞 1098 – குழந்தைகள் உதவி எண் (Child Helpline)ஆபத்தில் இருக்கும் குழந்தைகள், குழந்தைத் தொழிலாளர், குழந்தைகள் மீதான வன்முறை, காணாமல் போன குழந்தைகள் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு உடனடி உதவி பெற இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

📞 1091 / 181 – பெண்கள் உதவி எண் (Women Helpline)பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்பத் தொல்லை, பாலியல் தொந்தரவு, பணியிட பிரச்சினைகள் உள்ளிட்ட அவசர சூழ்நிலைகளில் இந்த உதவி எண்களை தொடர்பு கொண்டு உடனடி ஆலோசனை மற்றும் பாதுகாப்பு பெறலாம்.

📞 112 – ஒருங்கிணைந்த அவசர சேவை (Emergency Response Support System)போலீஸ், ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத் துறையின் அவசர சேவைகளை ஒரே எண்ணின் மூலம் தொடர்பு கொள்ளலாம். சாலை விபத்து, தீ விபத்து, உயிர் ஆபத்து உள்ளிட்ட அவசர சூழ்நிலைகளில் இந்த எண் பயன்படும்.

📞 1930 – சைபர் குற்ற உதவி எண் (Cyber Crime Helpline)ஆன்லைன் பண மோசடி, UPI மோசடி, வங்கி கணக்கு மோசடி, சமூக வலைதள மோசடி உள்ளிட்ட இணையவழி குற்றங்கள் தொடர்பாக உடனடியாக புகார் அளிக்க இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம். பண மோசடி ஏற்பட்ட உடனேயே தகவல் தெரிவித்தால், பணத்தை மீட்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதிகாரிகள் மேலும் கூறுகையில், இந்த உதவி எண்கள் அவசர காலங்களில் மட்டுமின்றி, தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும் வழங்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. குறிப்பாக பெற்றோர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிக்குச் செல்லும் பெண்கள் ஆகியோர் இந்த எண்களை கட்டாயம் தங்களது செல்பேசியில் சேமித்து வைத்திருக்க வேண்டும் என்றும், குடும்ப உறுப்பினர்களுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

"இன்றே இந்த உதவி எண்களை உங்கள் மொபைலில் சேமியுங்கள்... ஒரு அவசர நேரத்தில் அது உங்களையோ அல்லது மற்றொருவரின் உயிரையோ காப்பாற்ற உதவலாம்" என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இந்த நம்பர்கள் எப்போதும் தேவைப்படும் நம்பர். அதனால் இதை மிஸ் பண்ணிடாதீங்க. உடனே சேவ் செய்திடுங்க.