திருமண வரவேற்பிலேயே தன்னை துன்புறுத்திய மணமகனுக்கு No சொல்லி மாஸ் காட்டியுள்ளார் ஒரு மணமகள்..


திருமணங்கள் சோர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்ற கூற்று உண்டு. அப்படி இவருக்கு இவர் என்று ஏற்கெனவே முடிவாகியிருக்கும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி பெரியவர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் ஒரு சில நேரங்களில் நடக்காமல் போகவும் வாய்ப்பு உண்டு. அப்படி ஒரு சம்பவம்தான் நேற்று நடைபெற்றுள்ளது. நிச்சயிக்கப்பட்ட மணமகனை கடைசி நேரத்தில் மணமகள் வேண்டாம் என்று கூறியதால் வேறு ஒரு நபருடன் அவருக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. 


கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ஒரு பொறியியல் பட்டதாரி ஒருவருக்கும் இளம் பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்து. இவர்கள் இருவருக்கும் பண்ருட்டியில் நேற்று காலை திருமணம் நடைபெற இருந்தது. அதற்கு முன்பாக நேற்று முன்தினம் இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்துள்ளது. அதில் மணமகள் மற்றும் மணமகன் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். அந்த வரவேற்பு நிகழ்ச்சியில் சில கலை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. 




அதன் ஒருபகுதியாக பாடல் ஒன்றுக்கு மணமகன் மற்றும் மணமகள் ஆகிய இருவரும் நடனமாடியுள்ளனர். அப்போது மணமகளின் உறவினர் ஒருவரும் மேடையில் வந்து நடனமாடியுள்ளார். இதன் காரணமாக மணமகன் மிகவும் எரிச்சல் அடைந்ததாக தெரிகிறது. அப்போது அவர் என்ன செய்வது என்று தெரியாமல் ஆத்திரத்தில் மணமகளின் கன்னத்தில் அறைந்துள்ளார். அனைவரும் முன்பாக திடீரென மணமகன் அப்பெண்ணை அடித்தது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. இதைத் தொடர்ந்து மணமகள் மிகவும் வருத்தத்துடன் அழுதுள்ளார். மேலும் அப்பெண், “இவர் திருமணத்திற்கு முன்பாகவே இப்படி நடந்து கொள்கிறார். திருமணத்திற்கு பிறகு எப்படி இருப்பார் என்று தெரியாது. ஆகவே இந்த திருமணத்தை உடனடியாக நிறுத்திவிடுங்கள்” என்று அழுது கேட்டுக் கொண்டுள்ளார். 


இதையடுத்து மணமகளை இரு வீட்டினரும் சமாதானம் செய்ய முயற்சி செய்துள்ளனர். அப்போது மணமகளை அறைந்தற்காக மணமகன் அப்பெண்ணின் தந்தையின் காலில் விழுந்து மண்ணிப்பு கேட்டுள்ளார். இருப்பினும் மணமகள் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்ததால் திருமணத்தை நிறுத்தும் முடிவை இரு குடும்பத்தினரும் எடுத்துள்ளனர். அதன்பின்னர் மணமகளின் குடும்பத்தினர் உறவினர்களுடன் கலந்து பேசி அவருக்கு வேறு ஒரு நபருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளனர். இதற்காக மணமகள் உறவினர் வட்டாரத்தில் இருந்த ஆண் ஒருவரை அழைத்து அப்பெண்ணிற்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். திருமண வரவேற்பில் மணமகளை மணமகன் அறைந்ததால் அந்த திருமணம் நின்றுபோனதும், மணமகளின் சமயோசிதமான முடிவும் அங்கு மகிழ்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது


மேலும் படிக்க: தஞ்சை மாணவி மரணம் : முதற்கட்ட விசாரணையில் மதம் மாறச்சொல்லியது உறுதியாகவில்லை - தஞ்சை எஸ்.பி