கள் இறக்கும் தொழிலாளர்கள் வேலை இல்லாததால் புலம்பெயர்ந்து மற்ற நாடுகளுக்கும், அண்டை மாநிலத்திற்கும் சென்றுள்ளதாக கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி கூறியுள்ளார்.
கரூரில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தெரிவிக்கையில், ”காவேரி தீர்ப்புக்கு புறம்பாக நீர்வளத் துறை நடந்து கொண்டுள்ளது. இந்த ஆண்டு பருவ மழை குறைந்ததால் 15 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் விடப்படவில்லை, குறுவைக்கு மட்டும் 3 லட்சம் ஏக்கருக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.
சாயப்பட்டறை, தோல் தொழிற்சாலை, காகித தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சாராய ஆலை உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்காக முதலாளிகள் பணம் கொடுக்கிறார்கள். இதற்கு நீர் வளம் துறை தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதற்காக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ராஜினாமா செய்ய வேண்டும்” என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய நல்துசாமி, “கள் இறக்கும் தொழிலாளர்கள் தற்போது வேலையில்லாததால் நாடு கடந்து அண்டை மாநிலத்திற்கு புலம்பெயரும் நிலை ஏற்பட்டுள்ளது. கள்ளுக்கு உடனடியாக தடை நீக்க வேண்டும் தவறினால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளிலும் திமுக வெற்றி வாய்ப்பை இழப்பார்கள். தேர்தலுக்கு முன்பு அரசியல் தலைவர்களை சந்திக்க உள்ளோம். எங்களது கோரிக்கைகளை ஏற்றால் நாங்கள் ஆதரவு அளிக்க உள்ளோம்” என்று தெரிவித்தார்.