உலக புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு பவனி நடைபெற்றது. குருத்தோலைகளை கையில் ஏந்தியபடி கீர்த்தனைகளை பாடியபடி பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பவனியில் பங்கேற்பு.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்களின் தவக்காலம் கடந்த பிப்ரவரி மாதம் 22ஆம் தேதி சாம்பல் புதனுடன் தொடங்கி 40 நாட்கள் நடைபெற்று வருகிறது. தவக்காலத்தின் ஒரு நிகழ்வாக ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும் சிலுவை பாதை நடைபெற்றது. தவக்காலத்தின் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று குருத்தோலை ஞாயிறோடு தவக்காலத்தினுடைய புனித வார நிகழ்வுகள் தொடங்கி இயேசு கடைசி நேர நிகழ்வுகளை தியானிக்க கூடிய நிகழ்வாக இந்த நாட்களில் இருக்கின்றன.
புனித வியாழன் அன்று ஆண்டவர் இயேசு சீடர்களுடைய பாதங்களை கழுவி உலகத்திலே ஒவ்வொருவரும் மற்றவருக்கு அன்பு செலுத்தவேண்டும், பணிவிடை செய்ய வேண்டும், உதவி செய்ய வேண்டும் என்பதை உணர்த்துகின்ற நாளாகவும், கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் நம்புகின்ற நற்கருணையை ஏற்படுத்திய முக்கிய நாளாக இருக்கின்றது.
அதன் மறுநாள் புனித வெள்ளியிலே இயேசுவினுடைய பாடுகளுடைய இறப்பை தியானிக்க கூடிய முக்கிய நிகழ்வு நடைபெறுகிறது. அடுத்து வரக்கூடிய சனிக்கிழமை புனித சனி என்று அழைக்கப்படுகிறது. அந்த நள்ளிரவில் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அடக்கம் செய்யப்பட்ட மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த அந்த நிகழ்வை வழிபடக்கூடிய நாளாகவும். அடுத்த நாள் உயிர்ப்பு ஞாயிறோடு தவக் காலமானது நிறைவு பெற உள்ளது.
வேளாங்கண்ணியில் திரண்ட கிறிஸ்தவர்கள்
தவக்காலத்தில் முக்கிய நிகழ்வாக கருதக்கூடிய குருத்தோலை ஞாயிறையொட்டி நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தில் குருத்தோலை ஞாயிறு இன்று நடைபெற்றது. பேராலய அதிபர் இருதயராஜ் தலைமையில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில் பங்கு தந்தைகள் மற்றும் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பிற மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
அப்போது குருத்தோலை பவனியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு குருத்தோலைகளை கையில் ஏந்தியப்படி ஹோசன்னா கீர்த்தனைகள் பாடியவாறு பவனியாக சென்றனர். அதனை தொடர்ந்து வேளாங்கண்ணி பேராலய கலையரங்கில் தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம், இந்தி, தமிழ் ஆகிய மொழிகளில் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.