தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில் பேருந்து நடத்துநர்களுக்கு தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. 


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று புதிதாக 2,654 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ள நிலையில் சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்தை கடந்து வருவதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சில தினங்களுக்கு முன் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. 


இதனையடுத்து பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம்  அணிய வேண்டும் எனவும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும், விதிகளை பின்பற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் எனவும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஒன்றாக பேருந்து நடத்துனர்களுக்கு தமிழக அரசின் போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பொதுவாக பேருந்துகளில் நடத்துநர்கள் ஒன்றன் பின் ஒன்றாக ஒட்டிக் கொண்டுள்ள டிக்கெட்டுகளை பிரிக்க எச்சில் தொட்டு பின் டிக்கெட்டுகளை கிழித்து தருவது வழக்கம். 


காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த இந்த வழக்கம் கொரோனா முதல் மற்றும் 2 ஆம் அலையின் போது மாற்றம் செய்யப்பட்டது. கொரோன பரவ வாய்ப்புள்ளதால் எச்சில் தொட்டு டிக்கெட் வழங்கக்கூடாது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் பேருந்து நடத்துநர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு மீண்டும் இந்த விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக  சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் எச்சில் தொட்டு டிக்கெட்டை வழங்குவதால் பயணிகள் மிகுந்த மன உளைச்சலுடன் பெற்றுக்கொள்வதாகவும், அதிகளவில் பயணிகள் எச்சில் தொட்டு அளிப்பது தொடர்பாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குவதால் சுகாதார கேடு ஏற்பட வாய்ப்பிருப்பதால் இனிவரும் காலங்களில் தண்ணீர் உறிஞ்சும் ஸ்பாஞ்சை பயன்படுத்தி டிக்கெட்டுகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


அதேசமயம் நடத்துநர்களுக்கு தேவையான ஸ்பாஞ்சை பணிமனை அதிகாரிகள் ஏற்பாடு செய்து வழங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண