செப்டம்பர் 3ம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.


ஆலோசனைக் கூட்டம்:


சென்னை வேப்பேரியில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவு மாவட்டச் செயலர்களுடன் ஞாயிற்றுக்கிழமை ஆலோசனை நடத்தினார். இதில்  மூத்த நிர்வாகிகள் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இக்கூட்டம் 3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்றது. அதில் பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.


ஓபிஎஸ் பேச்சு:


ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம்,  மதுரையில் நடைபெற்ற அதிமுகவின் மாநாட்டில் கூட்டம் கூடவில்லை. ஜெயலலிதா பல்வேறு மாநாடுகளை நடத்தியுள்ளார். ஒவ்வொரு மாநாடும் மற்றொரு மாநாட்டை மிஞ்சும் வகையில் பிரமாண்ட கூட்டம் கூடியிருக்கிறது. திருச்சியில் நாம் நடத்திய மாநாட்டிலும் பெரும் கூட்டம்  கூடியது. ஆனால், எடப்பாடி பழனிசாமி நடத்திய மாநாட்டில் கூட்டம் கூடாததுடன், வந்தவர்களுக்கும் சரியான முறையில் உணவுகூட கொடுக்காத நிலை ஏற்பட்டுள்ளது.


ஈபிஎஸ் வந்த பிறகு தோல்வியே..!


எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் தலைமை பொறுப்புக்கு வந்த பிறகு சந்தித்த 5 தேர்தல்களில் அனைத்திலும் அதிமுக தோல்வியையே சந்தித்துள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் இரட்டை இலை சின்னம் கிடைக்க வேண்டும் என்பதற்காக வேட்பாளரைத் திரும்பப் பெற்றோம். ஆனால், அதிமுக வேட்பாளர் 65,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.


எம்ஜிஆர் மறைவிற்கு பிறகு அதிமுக ஜெயலளிதா அணி, ஜானகி அணி என இரண்டு பிரிவுகளாக இருந்தபோது நடைபெற்ற தேர்தலில்கூட கொங்கு மண்டலத்தில் ஜெயலலிதா அணி 5 தொகுதிகளில் வெற்றிபெற்றது. அப்படிப்பட்ட கொங்கு மண்டலத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இப்போது படுதோல்வியை சந்தித்துள்ளது. அதிமுக சரித்திரத்தில் இப்படி நடந்தது இல்லை. அதிமுகவை படுபாதாளத்துக்கு எடப்பாடி பழனிசாமி தள்ளிவிட்டார். தொண்டர்களுக்காக கொண்டு வந்த பொதுச்செயலாளர் பதவியை மீட்டெடுக்க வேண்டும் என்பதே இந்த இரண்டாவது தர்ம யுத்தத்தின் நோக்கம். இனி, மக்கள் மன்றத்தைச் சந்திப்பதுதான் ஒரே தீர்வு.


சுற்றுப்பயணம்:


அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 3 முதல் என் பயணத்தைத் தொடங்க உள்ளேன். தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக மக்களைச் சந்திக்க உள்ளேன். நாடாளுமன்ற தேர்தலில் நாமும் வேட்பாளரை நிறுத்துவோம். அதிமுகவின் வரலாற்றை மீட்டெடுப்போம். அப்போது அவர்களாகவே நம்மிடம் திரும்பி வருவர்”  என  ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.


அதிமுக மாநாடு:


மதுரையில் நேற்று அதிமுகவின் மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கானோர் பங்கேற்ற இந்த மாநாட்டில் தொண்டர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், அந்த உணவு தரமாக இல்லை என தொண்டர்கள் பலரும் குற்றம்சாட்டியிருந்தனர். அதை குறிப்பிட்டு தான் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.