ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறோம் என இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ. பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 


சென்னை பசுமை வழிச்சாலையில் ஓ பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தப்போது, 2026ஆம் ஆண்டு வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். பொதுக்குழு சட்ட விரோதமாக, எனது இசைவு இல்லாமலே நடைபெற்றது என குறிப்பிட்டார். 


இரட்டை இலை சின்னம் இல்லை என்றாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம் என குறிப்பிட்டார். இந்த இடைத்தேர்தலில் பா.ஜ.க போட்டியிட்டால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு அளிப்போம் என கூறியுள்ளார். 


மேலும், அதிமுக தரப்பில் போட்டியிடும் உரிமை உள்ளதாக கூறி இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறினார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதற்காக அனைத்து முயற்சியும் மேற்கொள்வோம். அதிமுக நலனுக்காக எடப்பாடியுடன் சென்று பேச்சுவார்த்தை நடத்த தயார் என தெரிவித்தார். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதை மேற்கோள் காட்டினார். தேர்தல் ஆணையம் தரப்பில் தற்போது வரை ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் எனவே குறிப்பிடப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். 


தேர்தல் அறிவிப்பு:


காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற திருமகன் ஈவேரா, மாரடைப்பு காரணமாக காலமானதால், அந்தத்தொகுதிக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் 27-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. அதற்கான வேட்பு மனுத் தாக்கல் வரும் 31-ம் தேதி தொடங்கி, அடுத்த மாதம் 7-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி 27-ம் தேதி வாக்குப்பதிவும், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 


அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், கடந்த முறை அதிமுக கூட்டணி சார்பில், தமாகா சார்பில் யுவராஜ் களமிறங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன் எடப்பாடி தரப்பு தமாகா தலைவர் ஜி.கே.வாசனை நேரில் சந்தித்து பேசினர். இதுவரை ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிடப் போகிறார்கள் என இன்னும் தீர்மானிக்காத நிலையில் இன்று ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.