அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரனை அவரது வீட்டிற்கே நேரில் சென்று முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சந்தித்துள்ளார். அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரால் ஓரங்கட்டப்பட்டு, அ.தி.மு.க.வை விட்டு நீக்கப்பட்ட பின்னர் ஓ.பன்னீர்செல்வம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.


அரசியலில் உச்சக்கட்ட பரபரப்பு:


அதன் ஒரு பகுதியாக, ஓ.பன்னீர்செல்வம் இன்று டிடிவி தினகரனை சந்தித்து பேசியுள்ளார். பன்னீர்செல்வத்துடன் இணைந்து முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரனும் டிடிவியை சந்தித்துள்ளார்.


தனது வீட்டுக்கு வந்த ஓ. பன்னீர்செல்வத்தையும் பண்ருட்டி ராமச்சந்திரனையும் வாசல் வரை சென்று வரவேற்ற டிடிவி, இருவருக்கும் பொன்னாடை அணிவித்தார். அரசியல் சூழல் குறித்து பன்னீர்செல்வம், டிடிவி ஆலோசனை நடத்திய பிறகு, அனைவரும் சேர்ந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டனர்.


"இணைந்து செயல்பட முடிவு"


அப்போது, டிடிவி, ஓபிஎஸ் சேர்ந்து செயல்பட முடிவு என முன்னாள் அமைச்சர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார். பின்னர் பேசிய டிடிவி தினகரன், "அதிமுகவை மீட்க ஓ. பன்னீர்செல்வமும் நானும் ஒன்றிணைந்துள்ளோம்.


சிபிஎம்(மார்க்சிஸ்ட்), சிபிஐ(இந்திய கம்யூனிஸ்ட்) போல் இரு கட்சிகளும் செயல்படும். நேரில் சந்திக்கவில்லையே தவிர ஓ. பன்னீர்செல்வத்திடம் அடிக்கடி தொலைபேசியில் பேசினேன். ஓபிஎஸை நம்பி இருட்டில் கூட கையை பிடித்து செல்ல முடியும். எங்களுக்கு ஈபிஎஸ் துரோகி. திமுக எதிரி" என்றார்.


"சசிகலாவை சந்திப்பேன்"


"கடந்த காலங்களை மறுந்துவிட்டு இருவரும் ஒன்றிணைந்துள்ளோம்" என ஓபிஎஸ் கூறியுள்ளார். சசிகலா வெளியூரில் இருப்பதால் அவர் வந்தவுடன் விரைவில் அவரையும் சந்திப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், சசிகலா, டிடிவியை எதிர்த்து ஓபிஎஸ் தரம்யுத்தம் நடத்தினார். இதற்கிடையே, எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரான பிறகு, சசிகலா, டிடிவி ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் இணைந்து கட்சியை வழிநடத்தி வந்தனர்.


ஆனால், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு இடையே அதிகார போட்டி வெடிக்க, கட்சியின் பெரும்பாலான தலைவர்கள் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களாக மாறினார். ஓ. பன்னீர்செல்வத்தையும் அவரது ஆதரவாளர்களையும் பழனிசாமி அதிரடியாக நீக்கினார்.


இப்படி, தொடர் பின்னடைவுகளை சந்தித்து வரும் ஓ. பன்னீர்செல்வம், சென்னை - மும்பை போட்டியின்போது முதலமைச்சர் ஸ்டாலினின் மருமகன் சபரீசனை சந்தித்து பேசினார். இதில், சபரீசன் சிஎஸ்கே டி-ஷர்ட் அமர்ந்தபடி ஓபிஎஸ்ஸுடன் பேசும் வீடியோ காட்சிகளும், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.