விக்னேஷ் மரணம் தொடர்பாக உடற்கூராய்வு அறிக்கை வெளியான நிலையில் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். இதில் விக்னேஷ் மரண விசாரணையை சிபிசிஐடியில் இருந்து சிபிஐக்கு மாற்ற கோரிக்கை விடுத்த நிலையில் அதனை முதலமைச்சர் ஏற்காததல் அதிமுக எம்.எல்.ஏக்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி,


விக்னேஷ் மரணம் தொடர்பாக சட்டமன்றத்தில் முதலமைச்சர் குறிப்பிட்ட செய்தியும், தற்போது உடற்கூறு ஆய்வில் தெரிவிக்கப்பட்ட செய்தியும் முரண்பட்டுள்ள காரணத்தினால், இந்த வழக்கை நேர்மையாக நடைபெற சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தோம். ஆனால் முதலமைச்சர் எங்கள் கோரிக்கையை ஏற்காமல் சிபிசிஐடியிடம் இந்த வழக்கை ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்கள். விக்னேஷ் உடலில் காயங்கள் இருப்பதால் இதை கொலைவழக்காக பதிவு செய்வதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். கொலை வழக்காக பதிவு செய்யப்படும் என முதல்வரே கூறிய பிறகு நம்முடைய காவல்துறை அதிகாரிகளே இந்த வழக்கை விசாரித்தால் நியாயம் கிடைக்காது


பட்டண பிரவேச தடையை நீக்குக - எடப்பாடி பழனிசாமி



500 ஆண்டுகளுக்கும் மேலாக நடக்கும் பட்டண பிரவேச நிகழ்ச்சிக்கு அங்குள்ள வருவாய்த்துறை அதிகாரிகள் தடை விதித்து இருக்கிறார்கள். இங்குள்ள திமுக அரசு பழிவாங்கும் நோக்கத்தோடு பட்டண பிரவேசத்தை தடை செய்துள்ளார்கள். அதுவும் அங்கே இருக்கின்ற பல்லாக்கு தூக்குபவர்கள், பாரம்பரியமாக பட்டண பிரவேச நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆதீன எல்லைக்குள் தான் இந்த நிகழ்வு நடந்து வருகிறது. அதை தடை செய்ய அவசியமில்லை, இருப்பினும் சில அரசியல் காரணங்களுக்காக தடை செய்து இருப்பது கண்டிக்கத்தக்கது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மதுரை ஆதீனம்  அவர்களுக்கு கொலை மிரட்டல் விடப்பட்டுள்ளது. இதை வன்மையாக கண்டிக்கிறோம். ஆன்மீகத்தில் இந்த அரசு தலையிடுவது ஏற்று கொள்ள முடியாது.



முதலமைச்சர் அனைத்து மதத்தினருக்கும் பொதுவானவர்.அவர் தீபாவளிக்கு வாழ்த்து சொல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினார். திமுகவின் ஓராண்டு ஆட்சியில், சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது. சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அதிகரித்துள்ளது. அண்டை மாநிலத்திலிருந்து கஞ்சா கொண்டு வந்து தமிழகத்தில் விற்பனை செய்யப்படுகின்றது. திமுக தேர்தல் அறிக்கையில் அறிக்கப்பட்ட  அறிவிப்புகளில் 70 சதவீதம் நிறைவேற்றப்படவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தாலே மின்வெட்டு ஏற்படுகின்றது.  இந்த ஓராண்டுகால திமுக அரசு திறமையற்ற அரசு என ஈ.பி.எஸ். விமர்சித்தார்.