Udhayanidhi Stalin: முதல்வரும், நானும் ஒரே காலேஜ்.. இங்க நாங்க தான் சீனியர்.. உதயநிதி பேச்சு.. சிரித்த விஜய்!
Udhayanidhi Stalin Speech in TN Assembly: மு.க.ஸ்டாலின் சொன்னது போல திமுக என்றைக்கும் ஆக்க சக்தி தான். நாம் இங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வரிசையில் இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என வரும்போது முன்வரிசையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரும் விஜய்யும், நானும் ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள் என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கலகலப்பாக பேசிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு சட்டப்பேரவை நேற்று கூடியது. அதில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தற்காலிக சபாநாயகர் சோழவந்தான் கருப்பையா முன்னிலையில் பதவியேற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து தவெக சார்பில் போட்டியிட்ட ஜேசிடி பிரபாகர் சபாநாயகர் பதவிக்கும், துணை சபாநாயகர் பதவிக்கு ரவிசங்கரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இரண்டாம் நாளான இன்று சட்டப்பேரவையில் சபாநாயகராக ஜே.சி.டி.பிரபாகரும், துணை சபாநாயகராக ரவிசங்கரும் தேர்வு செய்யப்பட்டதை தொடர்ந்து பொறுப்பேற்றுக் கொண்டனர். தவெக சார்பில் அவை முன்னவர் செங்கோட்டையனும், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை அவரது இருக்கையில் அமர வைத்தனர். தொடர்ந்து ஒவ்வொரு அரசியல் கட்சி தலைவர்களும் அவர்களுக்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அந்த வகையில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலினும் உரையாற்றினார். அவர் தனது உரையில், “நேற்று எங்கள் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வீடு உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகளுக்கும் சென்று முதலமைச்சர் விஜய் வாழ்த்து பெற்றார். அந்த அரசியல் நாகரீகம் இந்த பேரவையிலும் தொடர வேண்டும் என எதிர்பார்க்கிறோம். திமுக எதிரிக்கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும்.
மு.க.ஸ்டாலின் சொன்னது போல திமுக என்றைக்கும் ஆக்க சக்தி தான். நாம் இங்கு ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற வரிசையில் இருந்தாலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி என வரும்போது முன்வரிசையில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.
முதலமைச்சரும் விஜய்யும், நானும் ஒரே கல்லூரியில் படித்த மாணவர்கள். அரசை வழிநடத்துவதில் திமுக தான் சீனியர். எங்களுடைய அனுபவத்தையும், அறிவையும் பகிர நாங்கள் தயாராக இருக்கிறோம். நீங்களும் அதை ஏற்க தயாராக இருங்கள். தமிழ்நாடு மாநிலத்தின் நலன் தான் முக்கியம். எங்கள் இரண்டு தரப்பையும் சபாநாயகர் நீங்கள் தான் அரவணைத்து செல்ல வேண்டும். சட்டமன்ற ஜனநாயகத்தில் ஆளுங்கட்சி காதுகளாகவும், எதிர்க்கட்சி குரலாகவும் இருக்க வேண்டும். ஆளும் கட்சிக்கு இணையான எதிர்க்கட்சி வரிசையும் அமைந்திருக்கிறது. ஆகவே மக்களுடைய எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில் எங்களுடைய பணிகள் நிச்சயம் இருக்கும்.
தமிழ்நாடு சிறப்பாக முன்னேற காரணம் இந்த பேரவையில் எடுக்கப்பட்ட விவாதங்கள், முடிவுகள், சட்டங்கள், தீர்மானங்கள் தான். பிற மாநிலங்களுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக தமிழ்நாடு சட்டப்பேரவை உள்ளது. அப்படிப்பட்ட இந்த பேரவையில் ஜனநாயக மாண்புகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து சபாநாயகர் நடுநிலைத் தன்மையோடு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Before You Go
C Vijayabaskar: திமுக போகும் விஜயபாஸ்கர்? கட்சியில் முக்கிய பொறுப்பு ஸ்டாலின் கணக்கு என்ன?
ட்ரெண்டிங் செய்திகள்





















