ஆன்லைன் சூதாட்டத் தடை அவசரச் சட்டத்தை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதது ஏன் என்று பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
’’தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்வதற்கான அவசரச் சட்டம் கடந்த மாதமே அரசிதழில் வெளியிடப்பட்டு விட்ட போதிலும், இன்று வரை அது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. தமிழக மக்கள் சீரழிவதைத் தடுக்கும் நோக்குடன் பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டம் இன்று வரை நடைமுறைப்படுத்தப்படாதது பெரும் புதிராக இருக்கிறது.
தமிழ்நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்தை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் முதன்மை அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்த போதுதான், தமிழக அரசின் சார்பில் நேர்நின்று வாதிட்ட மூத்த வழக்குறைஞர் கபில் சிபல், அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டு விட்டாலும் கூட இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று தெரிவித்தார். அதன் காரணமாக ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் குற்றம் செய்பவையாக கருதப்படாது; அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதுதான் தமிழக அரசு முன்வைத்த வாதத்தின் பொருள்.
இடைப்பட்ட காலத்தில் 6 தற்கொலைகள்
அவசர சட்டம் பிறப்பிக்கப்படுவதன் நோக்கமே, ஒரு குற்றத்தைத் தடுப்பதற்காக சட்டப்பேரவை கூடி சட்டம் இயற்றும் வரை காத்திருக்க முடியாது என்பதற்காகத்தான். தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் 17-ஆம் தேதி கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக அதுவரை காத்திருக்க முடியாது என்பதற்காகத்தான் செப்டம்பர் 26-ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடி ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது. ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படும் என்று கடந்த ஜூன் 10-ஆம் தேதியே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க இவ்வளவு அவகாசம் எடுத்துக் கொண்டதே தாமதம் ஆகும். இடைப்பட்ட காலத்தில் மட்டும் 6 பேர் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டனர்.
அமைச்சரவை ஒப்புதல் அளித்த ஒரு வாரத்தில் அக்டோபர் 3-ஆம் தேதி அவசர சட்டம் அரசிதழில் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் இதுவரை 47 நாட்கள் ஆகி விட்டன. இன்று வரை அவசர சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதற்குள்ளாக கடந்த மாதம் 17-ஆம் தேதி கூடிய சட்டமன்றக் கூட்டத் தொடரில் அவசர சட்டத்திற்கு மாற்றாக சட்டமுன்வரைவும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டு விட்டது. அப்படியானால், அவசர, அவசரமாக அவசரச் சட்டத்தை பிறப்பித்ததன் நோக்கமே வீணாகிவிட்டது.
அரசே ஒப்புக்கொண்டது
ஆன்லைன் சூதாட்ட அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட பிறகு தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்கள் நடைபெறவில்லை. ஆன்லைன் சூதாட்டம் குறித்த விளம்பரங்களும், அதை விளையாடுவதற்கான இணைய இணைப்புகளும் பொதுமக்களின் தொலைபேசிகளுக்கு குறுஞ்செய்தியாக வந்தாலும் கூட அவற்றை சுண்டினால் அவை ஆன்லைன் சூதாட்டத் தளங்களுக்கு மக்களை அழைத்துச் செல்லாமல் செயலிழந்து வந்தன. ஆனால், ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் அரசே ஒப்புக் கொண்டிருக்கும் நிலையில், இனி ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் எந்தத் தடையுமின்றி சூதாட்டங்களை நடத்தத் தொடங்கிவிடும். இது மிகவும் ஆபத்தானது.
ஆன்லைன் சூதாட்டங்கள் கடந்த ஒன்றரை மாதங்களாக நடைபெறவில்லை என்றாலும் கூட, அதற்கு முந்தைய காலங்களில் ஆன்லைனில் சூதாடி பணத்தை இழந்து கடனாளி ஆன 3 பேர் கடந்த சில வாரங்களில் தற்கொலை செய்து கொண்டனர். உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது தெரிவிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்டங்கள் மீண்டும் நடத்தப்பட்டால் அதனால் எவ்வளவு குடும்பங்கள் பாதிக்கப்படும்? எவ்வளவு தற்கொலைகள் நிகழும் என்பதை நினைக்கவே அச்சமாக உள்ளது.
ஆன்லைன் சூதாட்டம் மிகப்பெரிய சமூகக் கேடு என்பதை அரசே ஒப்புக் கொண்டு விட்ட நிலையில், அது குறித்து அமைச்சரவைக் கூட்டத்தில் 3 முறை விவாதிக்கப்பட்டு ஒன்றரை மாதங்களுக்கு முன்பே அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்ட நிலையில், அதை தமிழக அரசு இன்னும் நடைமுறைப்படுத்தாமல் இருப்பது நியாயமானதல்ல. எந்த நோக்கத்திற்காக ஆன்லைன் சூதாட்டத் தடை அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டதோ, அந்த நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் அதை தமிழக அரசு இன்று முதலே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். அதுமட்டுமின்றி, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலை விரைந்து பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்’’.
இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.