தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தில் நடராஜன் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு குடியிருப்பவர் ராஜமுருகன். தச்சு தொழிலாளியான இவருக்கு மீனாட்சி என்ற மனைவியும், பரமேஸ்வரி என்ற மகளும்,சுந்தர் என்ற மகனும் உண்டு. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர் குடியிருக்கும் வீட்டில் மேற்கூரையில் சிமெண்ட் பூச்சு சேதமடைந்திருந்தது. அதனை வீட்டின் உரிமையாளர் சிமெண்ட் வைத்து பூசி சீர் செய்திருக்கிறார். இந்நிலையில் நேற்று அதிகாலையில் ராஜமுருகன் தனது குடும்பத்தினருடன் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக வீட்டின் மேற்கூரை உற்பகுதி இடிந்து விழுந்தது. அதில் மகள் பரமேஸ்வரி சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த மகன் சுந்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்துக்குறித்து பேசிய, ராஜமுருகன் கூறும்போது, ''என் பிள்ளைகளின் படிப்பைத்தான் வாழ்நாள் குறிக்கோளாக நினைத்திருந்தேன். அதனால்தான் வறுமையில் என் குடும்பம் தவித்தாலும் என் பிள்ளைகளின் படிப்பிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். வாயைக் கட்டி வயித்தை கட்டி அவங்களை படிக்க வைத்தேன். பொறியியல்(பி.இ) படித்த என் மகள் பரமேஸ்வரி கடந்த 6 மாசமாகத்தான் ஒரு கம்பெனியில் வேலைக்கு போனாள். என் மகனும் டிப்ளமோ படித்துக் கொண்டிருக்கிறான்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க நாணயம், பைக் பரிசு!
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் தங்க நாணயம், பைக் பரிசு!
படிப்பெல்லாம் முடிந்து அவர்கள் வேலைக்கு போனபிறகு எங்கள் கஷ்டம் தீரும் என நினைத்தோம். அதெல்லாம் வீணா போச்சு. நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் சாப்பிட்டுவிட்டு படுத்து தூங்கினோம். நாங்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தபோது மேல் கூரையில் பூச்சு பெயர்ந்து விழுந்துவிட்டது. நேரடியாக என் மகள் மீது விழுந்ததில் அவள் அந்த இடத்திலேயே படுகாயம் அடைந்து மூச்சில்லாமல் போய்விட்டாள். அவளிடமிருந்து எந்த சத்தமும் வரவில்லை. என்மகன் மீதும் விழுந்ததில் அவன் சத்தம்போட்டான்.
என் மீதும் விழுந்தது. அக்காளை பாருங்கனு என் மகன் கத்தினான். நாங்க கற்களை நகர்த்தி பார்க்கும்போது என் மகள் உயிரோடு இல்லை. அந்த மேற்கூரை ஏற்கனவே பெயர்ந்திருந்தது. வீட்டு ஓனர் அதற்கு மேல் பூசி, வெள்ளையடித்துவிட்டு சமாளித்துவிட்டார். இதற்கிடையே நேற்று முன்தினம் பக்கத்து வீட்டில் சீரமைப்பு வேலை நடத்தினார்கள். அங்கே கட்டிடம் இடிக்கப்பட்டது. அந்த அதிர்வில் நாங்கள் குடியிருந்த வீட்டின் கூரை பெயர்ந்துவிட்டது என நினைக்கிறேன். அதனால் என் உயிருக்கு உயிரான மகளின் உயிர் போய்விட்டது. இப்போ என் மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருக்கிறான்’’ என்றார் கண்ணீர் மல்க.
இந்த சம்பவம் குறித்து வடபாகம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.