அண்டை மாநிலங்களுக்கு இயக்கப்படும் ஆம்னி பேருந்து சேவைகள் இன்றும் இயங்காது என ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகள் நிறுத்தம்:
தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்து சேவைகள் கடந்த இரண்டு நாட்களாக முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த 7 ஆம் தேதி வர்தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்குச் சென்ற 30க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை அங்குள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள் பிடித்து, ரூ.70 லட்சத்திற்கும் மேல் அபராதம் விதித்தனர். அதேபோல், கடந்த ஏழு நாட்களாக கர்நாடகப் போக்குவரத்துத் துறையும் தமிழக பதிவெண் கொண்ட 60க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளை தடுத்து, ஒவ்வொன்றுக்கும் ரூ.2.20 லட்சம் வரை அபராதம் விதித்துள்ளது.
அபராதமும் விளக்கமும்
இதுகுறித்து விளக்கம் அளித்த கேரளா மற்றும் கர்நாடக போக்குவரத்துத் துறையினர், “2021 ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட ‘ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட்’ விதிகளின்படி அண்டை மாநிலப் பேருந்துகளிடம் சாலை வரி வசூலிக்கப்படுகிறது. அதேபோல் நாங்களும் தமிழ்நாடு பேருந்துகளிடமிருந்து வரி வசூலிக்கிறோம்,” என தெரிவித்தனர்.
பேருந்து சேவை நிறுத்தம்:
இந்நிலையில், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கங்கள் கூட்டாக இணைந்து, மாநிலங்களுக்கு இடையிலான சேவைகளை தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளன.
இது குறித்து அவர்கள் தெரிவித்ததாவது:
“மாநிலங்களுக்கு இடையிலான ஆம்னி பேருந்துகளுக்கு ஒவ்வொரு காலாண்டிலும் தமிழ்நாடு சாலை வரி ரூ.1.50 லட்சம், ஆல் இந்தியா டூரிஸ்ட் பெர்மிட் ரூ.90,000, கேரளா மற்றும் கர்நாடகாவில் சேர்த்து ரூ.2 லட்சம் என மொத்தம் ரூ.4.50 லட்சம் வரை செலவாகிறது. இதனைச் சமாளித்து சேவையை தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லை,” என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கரை திங்கட்கிழமை (நவம்பர் 10) சந்தித்து கோரிக்கைகளை முன்வைத்தனர்.
அமைச்சருடன் பேச்சுவார்த்தை:
இன்று சென்னை, கிண்டியில் போக்குவரத்து ஆணையருடன் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையானது நடந்தது. பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கைகள் எடுக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் எனவும் அறிவித்தனர்
மாநிலத்துக்குள் மட்டுமே இயக்கம்:
பிரச்சனைக்கு இன்னும் தீர்வு எட்டப்படாததால், ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் மாநிலங்களுக்கு இடையிலான சேவைகளை நிறுத்தி, மாநிலத்துக்குள் மட்டுமே பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளனர்.
இதனால் பயணிகள் வெளிமாநிலங்களுக்கு செல்வதற்கு சிரமம் ஏற்ப்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டு அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் பொதுமக்கள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, ஆந்திராவுக்கு 70 பேருந்துகள், கர்நாடகாவுக்கு 183 பேருந்துகள், கேரளாவுக்கு 85 பேருந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தேவையெனில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.